/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளில் மூழ்கும் சாலை ரயில் பயணியர் அச்சம்
/
இருளில் மூழ்கும் சாலை ரயில் பயணியர் அச்சம்
ADDED : மே 17, 2025 02:04 AM

வண்டலுார்:வண்டலுார் ரயில் நிலையம் செல்லும் பாதையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் பயணியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தாம்பரம் -- செங்கல்பட்டு புறநகர் ரயில் மார்க்கத்தில் உள்ள வண்டலுார் ரயில் நிலையம் வழியாக, அதிகாலை 4:30 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரையில், மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் நிலையத்திற்குச் செல்ல, வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில், மின் கம்பங்களை மறைத்து மரங்கள், கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இதனால், மின் விளக்குகளின் வெளிச்சம் சாலையில் விழாமல், மாலை 6:00 மணிக்கே இருள் சூழ்ந்து, இந்த சாலை கும்மிருட்டாக மாறுகிறது.
போதிய வெளிச்சம் இல்லாததால், மாலை 6:00 மணிக்கு மேல் பணி முடித்து ரயிலில் திரும்பும் பகுதிவாசிகள், இந்த இருள் சூழ்ந்த சாலையில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மது பிரியர்கள் இப்பகுதியில் மது அருந்துவதால், பெண்கள் பீதியுடன் செல்கின்றனர்.
எனவே, ரயில் நிலையம் செல்லும் பாதையில் மின் கம்பங்களை மறைத்து நிற்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தி, எரியாத மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.