UPDATED : அக் 24, 2026 08:59 PM
ADDED : அக் 24, 2026 08:54 PM

திருப்போரூர்: திருப்போரூர் வனப்பகுதியில் நீளமான மலைப்பாம்பு இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.
அவை போலியான புகைப்படம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போரூர் வனசரகத்தில் 5,600 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அதேபோல் திருப்போரூரை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வனச்சரக பகுதிகளிலும் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த வனப்பகுதி மலைகளின் இடையே சங்கிலித்தொடர் போல அமைந்துள்ளன.
திருப்போரூர் வனச்சர பகுதிகளில் மான் இனங்கள், முள்ளம்பன்றி, நரி, மயில், உடும்பு, குரங்கு, உடும்பு உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், திருப்போரூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிரிவல பாதை அருகே மலைப்பாம்பு ஒன்று, படுத்திருப்பது போன்ற புகைப்படம் இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இதைப்பார்த்து சிலர் அச்சம் அடைந்து புகைப்படத்தை திருப்போரூர் வனச்சரக அலுவலகத்தில் காண்பித்துள்ளனர். வன அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் சென்று ஆய்வு செய்தபோது அதற்கான அறிகுறிகள் இல்லாததால் அவை போலியான புகைப்படம் என தெரிய வந்தது. அதேபோல், சிலர் இந்த படம் ஏ.ஐ., தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்போரூர் வனச்சரக அலுவலர் அஸ்கரி கூறுகையில்,
கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒருவர் மலைப்பாம்பு இருக்கும் புகைப்படத்தை திருப்போரூர் அலுவலகத்திற்கு வந்து காண்பித்தார். நாங்கள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தோம். ஆய்வில் அதற்கான அறிகுறிகள், இடத்தின் அடையாளம் ஏதும் இல்லை. அவை போலியான புகைப்படம். அதேபோல், இந்த படத்தில் இருப்பது போன்ற மலைப்பாம்பு வனச்சரக அலுவலக பதிவேடுகளிலும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றார்.
