மென்பொருள் ஏற்றுமதியில் செங்கல்பட்டு முதலிடம்! ரூ.1.06 லட்சம் கோடியை தாண்டி சாதனை
மென்பொருள் ஏற்றுமதியில் செங்கல்பட்டு முதலிடம்! ரூ.1.06 லட்சம் கோடியை தாண்டி சாதனை
UPDATED : ஜூன் 17, 2026 08:51 AM
ADDED : ஜூன் 16, 2026 10:45 PM

- நமது நிருபர் -
மென்பொருள் ஏற்றுமதியில், செங்கல்பட்டு மாவட்டம், 1.06 லட்சம் கோடி ரூபாயை எட்டி, தமிழகத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளது. தலைநகர் சென்னை, 66,000 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில், தமிழகம் விரைவில், 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிடும் என, தொழிற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஐ.டி., பூங்காக்கள், செஸ் எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 'ஸ்டார்ட் அப்' மையங்கள் போன்றவை, மென் பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன.
பல ஆயிரம் கோடி அந்த வகையில், தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக, மென்பொருள் ஏற்றுமதி, பல ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உட்கட்டமைப்பு, கணினி அறிவியல் பட்டதாரிகளின் ஆர்வம், அரசின் சலுகை போன்றவற்றால், பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களை தமிழகத்தில் நிறுவுகின்றன.
கடந்த நிதியாண்டில், மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் முதலிடத்தில் இருப்பது, மதுரையை சேர்ந்த சரவணக்குமார் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விபரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இதன்படி, 2025 - 26ம் நியாண்டில், செங்கல்பட்டு மாவட்டம், 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்து, சாதனை படைத்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை மாவட்டம், 66,186 கோடி ரூபாய் மதிப்பில், மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது.
கோவை 13,286 கோடி ரூபாய்; மதுரை 1,851 கோடி ரூபாய்; திருச்சி 146 கோடி ரூபாய்; சேலம் 159 கோடி ரூபாய்; திருநெல்வேலி 40 கோடி ரூபாய்; ஓசூர் 14 கோடி ரூபாயக்கும் மென்பொருட்களை ஏற்றுமதி செய்து, அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளன.
நம்பிக்கை இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தாம்பரம் மெப்ஸ், சிறுசேரி ஐடி பூங்கா ஆகிய இடங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த மென்பொருள் நிறுவனங்கள், சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகியவை இரண்டாம் நிலை நகரங்களில் செயல்பட தொடங்கி உள்ளன.
தமிழக அளவில் மென்பொருள் ஏற்றுமதி, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, 'க்ளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனலடிக்ஸ்' போன்ற துறைகளில், தமிழகம் வேகமாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
இதனால் வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி, 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி மேலும் வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
