/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரத்தில் மண் அரிப்பு படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு
/
ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரத்தில் மண் அரிப்பு படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு
ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரத்தில் மண் அரிப்பு படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு
ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரத்தில் மண் அரிப்பு படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு
ADDED : நவ 06, 2025 11:59 PM

செய்யூர்: ஆலம்பரைக்குப்பம் கிராமத்தில் உள்ள முகத்துவாரம் பகுதியில், கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நீர்வழித்தடம் மாறி வருவதால், படகுகள் நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பத்தில், கழிவெளி நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் ஓங்கூர் ஆறு நீர் என அனைத்தும், ஆலம்பரைக்குப்பம் பகுதியில் உள்ள கழிவெளியுடன் இணைந்து, முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, முகத்துவாரம் பராமரிப்பின்றி துார்வாரப்படாமல் இருந்ததால், மணல் மூடி துார்ந்து போய், மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல், விளை நிலங்கள் மற்றும் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.
இதையடுத்து இரண்டு மாவட்ட வருவாய் அதிகாரிகள் இணைந்து,'பொக்லைன்' இயந்திரம் மூலமாக முகத்துவாரம் பகுதியில் மூடி இருந்த மணல் பகுதியை அகற்றி, முகத்துவாரத்தை திறந்து வைத்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முகத்துவாரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால், வேகம் மற்றும் நீரோட்டம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு முகத்துவாரம் துார்வாரப்பட்ட தெற்குப் பகுதியில் இருந்து, 70 மீட்டர் தொலைவிற்கு வடக்கு நோக்கி, மீனவர்கள் படகு நிறுத்தும் இடத்திற்கு முகத்துவாரம் நகர்ந்து உள்ளது.
இதனால், அப்பகுதி மீனவர்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல், கழிவெளியில் தங்களது படகுகளை நிறுத்தி வருகின்றனர். பருவ மழையில் கழிவெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.
மேலும் இதே நிலைத் தொடர்ந்தால், கடப்பாக்கம் கடற்கரைப் பகுதி முழுதும் மண் அரிப்பு ஏற்பட்டு, படகு நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் அரிப்பைத் தடுக்க பாறைகள் கொட்டி, தடுப்பு அமைக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

