/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
செங்கை மாவட்டத்தில் அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
செங்கை மாவட்டத்தில் அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
செங்கை மாவட்டத்தில் அகற்றப்படாத கொடி கம்பங்கள் அலட்சியம் ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூன் 02, 2025 10:50 PM

செங்கல்பட்டு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சாலையோரம் இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். விபத்துகள் மற்றும் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், நுாறு அடிக்கும் மேல் கொடி கம்பங்கள் அமைத்தனர்.
இந்த கொடி கம்பங்கள் சாலையின் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று வீசினால், கொடி கம்பங்கள் கீழே விழும் சூழலில் உள்ளன. இதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது, கொடி கம்பங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பொது இடங்களில் உள்ள தி.மு.க., கொடி கம்பங்கள் அகற்ற வேண்டுமென, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு, கடந்த ஏப்., 21ம் தேதியுடன் முடிந்தது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், இன்னும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதற்கிடையில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற, கட்சியினருக்கு தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும், கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தாங்கள் அமைத்த கொடி கம்பங்களை அகற்ற முன்வரவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை, அனைத்து அரசியல் கட்சியினரும் மதிக்காமல் புறக்கணித்தனர்.
இதைத்தொடர்ந்து, 'தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளில் கொடி கம்பங்களை அகற்ற வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் 579, திருக்கழுக்குன்றம் 551, திருப்போரூர் 554, மதுராந்தகம், 943, செய்யூர் 688, தாம்பரம் 815, பல்லாவரம் 508, வண்டலுார் 432 என, மொத்தம், 5,070 எண்ணிக்கையில், பல்வேறு அரசியல் கட்சிகளில் கொடி கம்பங்கள் உள்ளன.
இதில், 982 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன.
விபத்துகள் மற்றும் பெரிய அசம்பாவிதம் நடப்பதற்குள், மீதமுள்ள கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில், அரசியல் கட்சியினர் 150 அடி உயரத்திற்கும் மேல் கொடி கம்பங்கள் அமைத்துள்ளனர். பலத்த காற்று வீசும் போது, கம்பங்கள் உடையும் நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் எப்போதும் அச்சத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது.
- ஆர்.விமல்,
சமூக ஆர்வலர்,
புலிப்பாக்கம், செங்கல்பட்டு.