/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ள தடுப்பு மேம்பாட்டு பணி செப்., 15க்குள் முடிக்க உத்தரவு
/
வெள்ள தடுப்பு மேம்பாட்டு பணி செப்., 15க்குள் முடிக்க உத்தரவு
வெள்ள தடுப்பு மேம்பாட்டு பணி செப்., 15க்குள் முடிக்க உத்தரவு
வெள்ள தடுப்பு மேம்பாட்டு பணி செப்., 15க்குள் முடிக்க உத்தரவு
ADDED : ஆக 19, 2025 12:17 AM
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு மேம்பாட்டு பணிகளை, நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி, அனைத்து பணிகளையும், செப்., 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடு வழியாக, 62 ஏரிகளின் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
இந்த மடு பகுதி, 2.6 கி.மீ., நீளத்தில், 120 முதல் 200 மீட்டர் அகலம் வரை மாறுபட்ட அளவுகளில் உள்ளது. இதனால், கால்வாயை சீராக அமைத்து, மறு சீரமைப்புக்காக, 27 கோடி ரூபாய் ஒதுக்கி பணி நடந்து வருகிறது.
இந்த பணியை, நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி, பணியின் தன்மை குறித்து கேட்டறிந்து, எப்போது பணி முடியும் எனக் கேட்டார்.
அதற்கு, பருவ மழைக்கு முன் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
கண்ணகி நகரை ஒட்டியுள்ள குறுகலாக உள்ள கால்வாயை பார்வையிட்டு, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அதிகாரிகளிடம் கூறினார்.
தொடர்ந்து, சோழிங்கநல்லுார் செம்மொழி சாலையில் நடைபெறும் நீர்வழி தரைப்பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு, உரிய ஆலோசனை வழங்கினார்.
மேலும், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி மற்றும் கோவிலம்பாக்கம் நீர்வழி பாதைகளில் நடக்கும் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு, அதன் தன்மைகளை கேட்டறிந்தார்.
தென்சென்னை சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், மேம்பாட்டு பணிகள் மற்றும் தேவையான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, செப்., 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அப்போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.