குண்டு வெடித்து மாணவர் பலி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
குண்டு வெடித்து மாணவர் பலி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
ADDED : ஏப் 15, 2026 04:24 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது.
இங்கு இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவ படை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சுழற்சி முறையில் துப்பாக்கி சுடுதல், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது வனப்பகுதி மற்றும் மலைகளில் குண்டுகள் சிதறி விழுகின்றன. இதில் சில குண்டுகள் வெடிக்காமலும் இருக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பயிலும், உத்திர பிரதேச மாநில மாணவர்கள் 6 பேர் அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு வெடிக்காமல் இருந்த குண்டுகளை எடுத்து விளையாடிய போது, எதிர்பாராத விதமாக ராக்கெட் லாஞ்சர் வெடித்தது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யாசூன்யாதவ், 21 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ஆரியன்சர்மா, 21 என்ற மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியை தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று காலை தடயங்கள் மற்றும் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
