ADDED : பிப் 21, 2026 05:34 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வந்த, 53 குடும்பத்தினருக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 4 மற்றும் 17வது வார்டிற்கு உட்பட்ட சூரக்கோட்டை, சந்தை தெரு பகுதியில், ஆட்சேபனை அற்ற பாட்டை புறம்போக்கு பகுதியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக, வீடு கட்டி ஒரே இடத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்கள், பட்டா இன்றி தவித்து வந்தனர்.
இவர்கள் அனைவரும், தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்.
மேற்கண்ட பகுதிவாசிகள், தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்குமாறு, பல ஆண்டுகளாக தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், கலெக்டர், தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் முடிவு செய்து, இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 53 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று, மதுராந்தகம் நகரமன்ற தலைவி மலர்விழி தலைமையில், வருவாய் ஆய்வாளர் பிரேமா முன்னிலையில், 53 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. 2வது வார்டு நகராட்சி கவுன்சிலர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சாமிநாதன், விக்னேஷ் குமார் உடன் இருந்தனர்.
