தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மண்ணிவாக்கத்தில் மூடுகால்வாயுடன் சாலை விரிவாக்க பணி முடக்கம்!மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கும்

மண்ணிவாக்கத்தில் மூடுகால்வாயுடன் சாலை விரிவாக்க பணி முடக்கம்!மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கும்

மண்ணிவாக்கத்தில் மூடுகால்வாயுடன் சாலை விரிவாக்க பணி முடக்கம்!மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கும்


UPDATED : செப் 10, 2026 11:29 PM

ADDED : செப் 10, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 11:29 PM ADDED : செப் 10, 2026 09:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வண்டலுார்: மண்ணிவாக்கம் சந்திப்பில், மூடு கால்வாயுடன் சாலை விரிவாக்க பணிகளை 2 கோடி ரூபாயில் தொடங்கிய நெடுஞ்சாலை துறை, பணிகளை முழுதுமாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் வண்டலுார் ஏரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் இடையிலான, 34 கி.மீ., துார நெடுஞ்சாலையின் சுற்று பகுதியில், ஒரகடம், வல்லம் -- வடகால், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுகோட்டை என, ஐந்து 'சிப்காட்' எனும் தொழில்துறை பூங்காக்கள் உள்ளன.

இதில், வல்லம் - வடகால் சிப்காட் பூங்காவில் விண்வெளி ஆராய்ச்சி, ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு, பிள்ளைப்பாக்கத்தில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பணிகள், தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

தவிர, 'நிசான், அப்பல்லோ டயர்ஸ், ஆல்ஸ்டோம், இன்பெக் இந்தியா, ஹூன்டாய்' உட்பட பல முன்னணி நிறுவனங்களும், 1,000க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்கள், இயந்திரங்கள், கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள், சென்னை துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு, கப்பல் வாயிலாக உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த கனரக வாகனங்கள், வாலாஜாபாத் சாலை வழியாக மண்ணிவாக்கம் சந்திப்பு அணுகுசாலையில் 500 மீ., துாரம் சென்று, அதன்பின் வண்டலுார்- - மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலை வழியாக சென்னை துறைமுகத்தை சென்றடைகின்றன.

இதில், மண்ணிவாக்கம் சாலை சந்திப்பின் அகலம் குறைவு. இதனால், மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அணுகுசாலைக்கு கனரக வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாமல், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன.

இதையடுத்து, மண்ணிவாக்கம் சந்திப்பில், கனரக வாகனங்கள் எளிதாக திரும்பும்படி, சாலையின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்களும் வலியுறுத்தி வந்தன.

அதன்படி தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மண்ணிவாக்கம் சாலை சந்திப்பில் விரிவாக்க பணி, கடந்தாண்டு டிச., மாதம் தொடங்கப்பட்டது.

ஆனால், பணி தொடங்கிய வேகத்திலேயே அத்திட்டத்தை தமிழக நெடுஞ்சாலை துறை கைவிட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில், சாலையில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கி வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, மண்ணிவாக்கம் சாலை சந்திப்பில், அணுகு சாலை அருகே, முடிச்சூர், வண்டலுார் ஆகிய இரு ஏரிகளை இணைக்கும் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயின் அகலத்தை விரிவுப்படுத்த, மூடுகால்வாயுடன் கூடிய சாலை விரிவாக்க பணிகளை தொடங்க, 2025, அக்., மாதம், தமிழக நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, தமிழக அரசால் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 48 மீ., நீளம், 3 மீ., ஆழம், 4 மீ., உயரத்தில் மூடு கால்வாய் அமைத்து, சாலை விரிவாக்க பணிகள், 2025, டிச., மாதம் தொடங்கப்பட்டன.

ஆனால், வாகனங்கள் திரும்பி செல்வதற்கு மட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, மூடு கால்வாய் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால், மூடு கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட 48 மீ., நீளம், 3 மீ., ஆழம், 4 மீ., உயரம் உள்ள, பள்ளமான பகுதி, தற்போது மண் துார்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து, குப்பை கிடங்காக மாறியுள்ளது.

பருவமழை தொடங்கும் முன், நிலுவையில் உள்ள மூடு கால்வாய் பணிகளை முடிக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடுகால்வாய் பணி தடைபடுவதால், வண்டலுார் ஏரி நிரம்பி, அதிலிருந்து உபரி நீர் வெளியேறி, முடிச்சூர் ஏரியை சென்றடைவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசலால், இயல்பு நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:

கடந்தாண்டு தொடங்கப்பட்ட மூடுகால்வாய் பணி ஆறு மாதங்களில் முடிப்பதாக திட்டமிட்டிருந்தோம். இதற்காக 2 கோடி ரூபாய்க்கான 'டெண்டர்' விடப்பட்டது. ஆரம்பக்கட்டத்திலேயே ஒப்பந்ததாரர் முட்டக்கட்டை போட்டதால், ஓராண்டாகியும் இழுபறி நீடிக்கிறது. ஒப்பந்ததாரர் தரப்பில் கேட்டபோது, பாதி பணி முடிந்தும் தங்களுக்கு வர வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us