'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா பணிகள் முன்னேற்றமின்றி முடக்கம்!:ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு இடம் ஒதுக்குவதில் முரண்பாடு எனவும் கலைஞர்கள் புகார்
'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா பணிகள் முன்னேற்றமின்றி முடக்கம்!:ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு இடம் ஒதுக்குவதில் முரண்பாடு எனவும் கலைஞர்கள் புகார்
UPDATED : செப் 18, 2026 08:59 PM
ADDED : செப் 18, 2026 08:42 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகில், 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா அமைக்கும் பணி, எந்தவித முன்னேற்றமும் இன்றி ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளது. சிற்பக்கலை பூங்காவில் இடம் ஒதுக்குவது பற்றி, ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் முரண்பாடாக செயல்பட்டு வருவதாக சிற்பக்கலைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தொழில் மனைகளுக்கு வாடகை செலுத்த எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகளை தொடங்காமல் அரசு கிடப்பில் போட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கற்றளி, குடைவரை, கற்கோவில், கலை சிற்பங்கள் அதிகம் உள்ளன. கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்ட இச்சிற்பங்கள், இங்குள்ள சுற்றுலா பயணியரை கவர்ந்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் செதுக்கப்படும் சிற்பங்களுக்கும், மக்களிடம் வரவேற்பு உள்ளது.
இதற்காகவே, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. கற்சிற்பம் வடிக்கும் தொழிலில், 3,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிற்பக் கூடங்கள் பெரும்பாலும் சாலையோரம் உள்ளன. மேலும், சிற்பங்களை வடிக்கும் பாறைகற்கள் சாலையோரத்தில் குவிக்கப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
கற்களை இயந்திரம் கொண்டும் அறுக்கும்போது கல் துகள்கள் பரவி வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
இதனால், சிற்பக்கூடங்களை ஒருங்கிணைத்து, சிற்பத் தொழிலை மேம்படுத்தும் வகையில், மாமல்லபுரத்தில் சிற்பக்கலை பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்தது.
அதன்படி, மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், 'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா அமைப்பதாக, 2021ம் ஆண்டு, சட்டசபையில் அப்போதைய தி.மு.க., அரசு அறிவித்தது.
அதன்படி, 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிற்பக்கலை பூங்கா அமைக்க, 21.07 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளாக பணிகள் ஏதும் தொடங்காமல், அரசு கிடப்பில் போட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, முதற்கட்டமாக 11.73 ஏக்கரில், 4.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 66 தொழில் மனைகள் பிரிக்கும் பணியை, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார்.
பணிகள் தொடங்கப்பட்டதோடு சரி, ஓராண்டை கடந்தும், எந்தவித முன்னேற்றமும் இன்றி கிடக்கிறது. சிற்பக்கூடங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்கப்படாமலும், முடங்கியே உள்ளது.
இதுகுறித்து, சிற்பக்கலைஞர்கள் கூறியதாவது:
சிற்பக்கலை பூங்கா வளாகத்தை ஒட்டியே, தி.மு.க., தலைமையிட அலுவலகம் அமைக்கப்படுகிறது. அதற்கு இடையூறாக சிற்பக்கலை பூங்கா இருக்கும் என கருதியே, தி.மு.க., அரசு, இத்திட்டத்தை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, சிற்பக்கலை பூங்காவில் இடம் ஒதுக்குவது பற்றி, ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் முரண்பாடாக கூறி வருகின்றனர்.
எங்கள் பெயரில், மனையை கிரயம் செய்து தருவதாக முதலில் கூறினர். அதற்கு ஒப்புக்கொண்டோம். பின் வாடகைக்குத்தான் அளிக்கப்படும் என்கின்றனர். தற்போதே எங்களது சொந்த இடத்தில்தான் சிற்பக்கூடம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு எதற்காக வாடகை இடம். சிற்பக்கலை பூங்கா அமைப்பது பற்றி, எங்களிடம் ஆலோசிக்காமலே அரசு முடிவெடுத்தது.
மாமல்லபுரத்தின் சிறப்பே சிற்பத் தொழில் தான். அதன் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படாலும், சிற்பக்கூடங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்க முயற்சிக்காமல் முடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இதனால், சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு தனிக்கவனம் செலுத்தி சிட்கோ சிற்பக்கலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சிட்கோ' நிர்வாகம் கூறுகையில், 'சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகளின்படி திட்டத்தை மறுவடிமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதை மாற்றியமைக்க திட்டமிட்டு, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்றது.
