/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிப்பறைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
/
கழிப்பறைக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 28, 2025 04:15 AM
செங்கல்பட்டு: அனுமந்தபுத்தேரியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு சுற்றுச்சுவர் அமைக்க, நகராட்சி நிர்வாகம் ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி பகுதியில், தசரா விழா முக்கிய விழாவாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் இப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.
இப்பகுதியில், மக்கள் அதிகம் வந்து செல்வதால் நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தில், 2021-22ம் ஆண்டு, 35 லட்சம் ரூபாய் நிதியில் கழிப்பறை கட்டப்பட்டது.
இந்த கட்டடம் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை வளாகத்திற்கு, சுற்றுச்சுவர் மற்றும் தரைதளம் அமைக்க, நகராட்சி பொது நிதியிலிருந்து, ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இப்பணிகளுக்கு, விரைவில் 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவக்கப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர். எனவே, பொதுமக்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டுவர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

