sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடுகளின் உணவு கூடங்களாக மாறி வரும் குப்பை மேடு

/

மாடுகளின் உணவு கூடங்களாக மாறி வரும் குப்பை மேடு

மாடுகளின் உணவு கூடங்களாக மாறி வரும் குப்பை மேடு

மாடுகளின் உணவு கூடங்களாக மாறி வரும் குப்பை மேடு


ADDED : செப் 09, 2025 12:48 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு - செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதான சாலைகள் மட்டுமல்லாது ஊராட்சிகளின் உட்புற சாலை ஓரங்களிலும் வீசியெறியப்படும் குப்பையின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், சாலையோரங்கள் குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. குப்பை கழிவுகளை மேயும் மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும்போது, சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மீது மோதி, அவர்கள் படுகாயமடைவதும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சாலையில் உலாவரும் மாடுகள் முட்டி பலர் காயமடைந்ததும், சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. தாம்பரம் அடுத்த படப்பை அருகே, நேற்று முன்தினம் நவீன், 19, என்ற இளைஞர், தன் தோழி அபிமணி, 21, என்பவருடன் பைக்கில் சென்றபோது, மாடு குறுக்கே வந்ததால், இருவரும் சாலையில் விழுந்தனர்.

அதே நேரத்தில் பின்னால் வந்த கார் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, சாலையோரம் குப்பை தேங்காதபடியும், மாடுகள் மேய்ச்சலுக்கு வராதபடியும் இருக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் செங்கை மாவட்டத்தில், புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், மக்கள் தொகை ஆண்டு தோறும் 5 சதவீதம் அதிகரித்து வருகிறது.

ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்பட அடிப்படை கட்டுமானங்கள் இல்லை. குறிப்பாக, துாய்மைப் பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை.

சீர்கேடு இதனால், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள பிரதான மற்றும் உட்புற தெருக்களிலும், மலைபோல் குப்பை கழிவுகள் தேங்கி, பகுதிவாசிகள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பையில் உணவு மற்றும் காய்கறி கழிவுகள் கலந்துள்ளதால், இவற்றை உண்பதற்காக, மாடுகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.

இந்த மாடுகள் மேய்ச்சலுக்காக வரும்போதும், மேய்ச்சலை முடித்து தங்கள் இருப்பிடம் திரும்பும்போதும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரசி மோதி விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

தவிர, இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் வருவது தெரியாமல் அவற்றின் மீது மோதும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைவதும் தொடர்கிறது.

எனவே, சாலையோரம் குப்பை வீசப்படுவதை தடுக்கவும், தேங்கி நிற்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றவும், அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டிகள் வைக்கவும், குப்பையில் மேயும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சாலையோரம் கொட்டப்படும் குப்பையை தினமும் அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வாரம் ஒரு முறையே இந்த பணி நடக்கிறது. இதுவே, மாடுகள் மேய்ச்சலுக்கு வர முதல் காரணம்.

அதிகரிப்பு குப்பையை சேகரிக்க போதிய எண்ணிக்கையில் வாகனங்கள் இல்லை. தவிர, துாய்மை பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் தான் சாலை தோறும் குப்பை தேங்குகிறது.

தெருக்களில் குப்பை வீசுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக, குப்பை வீசுவோருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். மக்களிடமும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:

ஆட்கள் பற்றாக்குறையால், ஒரு வார்டிற்கு வாரம் ஒரு முறை மட்டுமே துாய்மைப் பணிக்கு செல்ல முடிகிறது. தவிர, குறைவான ஊதியம் என்பதால், புதியவர்கள் இந்த வேலைக்கு வர விரும்புவதில்லை.

எனவே, இப்போது வழங்கப்படும் ஊதியத்தை, மூன்று மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை சேகரிக்க, தலா 2.75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மின் வண்டிகளில் 60 சதவீத வண்டிகள், ஒரே ஆண்டில் பழுதடைந்து விட்டன.

இதனால், வீடு தோறும் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் கடந்த இரு ஆண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புதிய குப்பை சேகரிப்பு வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாடு வளர்ப்போர் கூறியதாவது:

கால் நுாற்றாண்டிற்கு முன் வரை, செங்கை மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. இதனால், 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு, பால் விற்பனை மற்றும் அது சார்ந்த தொழிலை செய்து வந்தனர்.

மேய்ச்சல் நிலம் இவர்களால் வளர்க்கப்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல, ஏரி, குளங்களை சுற்றி, பல லட்சம் ஏக்கர் பரப்பில் மேய்ச்சல் நிலங்களும் இருந்தன.

கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்த நகரமயமாக்கலால், செங்கை மாவட்டத்தின் 40 சதவீத விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டபோது, கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, காணாமல் போயின.

இந்நிலையில், மாடு வளர்ப்பில் ஈடுபட்ட குடும்பத்தாரில், கணிசமானோர் தற்போதும் அதே தொழிலை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் வளர்க்கும் மாடுகளின் உணவு தேவையை நிவர்த்தி செய்ய மேய்ச்சல் நிலங்கள் இல்லை.

மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பத்தார், தங்கள் சொந்த செலவில் மாடுகளுக்கு தீவனம் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இல்லாததால், எங்கேனும் மேய்ந்து வரட்டும் என, காலையிலேயே மாட்டை அவிழ்த்து விடுகின்றனர்.

இந்த மாடுகள் தங்களின் பசியை போக்க, குப்பை மேடுகளை தேடி வருகின்றன. இதுவே, பிரச்னைக்கு காரணம்.

எனவே, காணாமல் போன மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தாம்பரம் - வேளச்சேரி சாலையில், கேம்ப்ரோடு சந்திப்பில் இருந்து பிரிந்து செல்கிறது, அகரம்தென் சாலை. இது, கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், கனரக வாகனங்கள், பேருந்துகள், கார், வேன் என, தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாடுகளின் தொல்லையும் பெருகிவிட்டது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் அவை, ஆங்காங்கே சாலையில் படுத்து அட்டகாசம் செய்கின்றன. இதனால், நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மாடுகள் படுத்திருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர்.








      Dinamalar
      Follow us