/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காெடுமைகள் குறித்து புகார் தர பெண்களுக்கு விழிப்புணர்வு 3 ஒன்றியங்களில் பாலின வள மையம் துவக்கம்
/
காெடுமைகள் குறித்து புகார் தர பெண்களுக்கு விழிப்புணர்வு 3 ஒன்றியங்களில் பாலின வள மையம் துவக்கம்
காெடுமைகள் குறித்து புகார் தர பெண்களுக்கு விழிப்புணர்வு 3 ஒன்றியங்களில் பாலின வள மையம் துவக்கம்
காெடுமைகள் குறித்து புகார் தர பெண்களுக்கு விழிப்புணர்வு 3 ஒன்றியங்களில் பாலின வள மையம் துவக்கம்
UPDATED : நவ 26, 2024 07:05 AM
ADDED : நவ 26, 2024 02:32 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலின வள மையம் எனும் பெண்களை பாதுகாக்கும் அமைப்பு, புனிததோமையார்மலை, காட்டாங்கொளத்துார், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்படுகிறது. அவற்றை, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
சென்னை புறநகர் பகுதியாக உள்ளதால், மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், தனியார் நிறுவனங்களில் பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.
புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில், குழந்தை திருமணம் அதிகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் நடக்கிறது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம் சமூக விரோத கும்பல் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
குழந்தை திருமணம், சிறுமியருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல், குடும்பத்தில் பெண்களுக்கு பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு தீர்வுகாண, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பாலின வள மையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்தல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும்போது, காவல் நிலையங்களில் புகார் அளிக்க அச்சமடைந்து, தவறுகளை மறைக்கின்றனர்.
அதை தவிர்த்து, அவர்களின் அச்சத்தை போக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள 'நாம் தோழிகள்' குழுவின் வாயிலாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, பாலின வள மையங்களில் புகார் அளிக்கலாம். மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டு, திருக்கழுக்குன்றத்தில் பாலின வள மையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக கொடுமை இழைக்கப்பட்டால், அவர்களுக்கு உணவு, உடை கொடுத்து காக்க, இந்த மையம் உதவும்.
உதாரணமாக இரவு 10:00 மணிக்கு மேல், ஒரு பெண்ணை கணவர் வீட்டார் கொடுமை செய்து வீட்டை வீட்டு வெளியேற்றினால், அந்தப் பெண் இம்மையத்தில் தங்க கைப்பட்டு, உணவு, உடை வழங்கப்படும்.
அவருடன், பெண் துாய்மை காவலர், மகளிர் போலீஸ் ஸ்டேனில் இருந்து வரும் பெண் காவலர் ஆகியோர் துணையாக இருப்பர். அடுத்த நாள் காலை குறிப்பிட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவர்களது உறவினர்களை அழைத்து, அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பெண்ணை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
சமாதானம் செய்ய இயலவில்லை என்றால், உடனடியாக அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு, அந்தப்பெண் அனுப்பி வைக்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உதவிகள் செய்யப்படும்.
தற்போது, மதுராந்தகம், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், இந்த மையம் அமைய உள்ளது.
அவற்றை, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று காணொலி காட்சி வாயிலாக துவக்கிவைத்தார். தமிழகம் முழுதும், 111 பாலின வள மையங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
இந்த மையங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தலா 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கின்றன என, மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.