/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு இடம் மீட்பு
/
ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு இடம் மீட்பு
ADDED : ஏப் 03, 2025 02:28 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே இரும்புலி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, செய்யூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.
செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டத்திற்கு உட்பட்டது, இரும்புலி கிராமம்.
இங்கு, அச்சிறுபாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை ஓரமுள்ள சுடுகாடு அருகே, அரசு மேய்க்கால் புறம்போக்கு புல எண்.387ல், 4.5 ஏக்கர் அரசு மேய்க்கால் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தருமாறு, செய்யூர் வட்டாட்சியர் மற்றும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியருக்கு, அப்பகுதியினர் மனு அளித்து வந்துள்ளனர்.
அதன்படி நேற்று காலை, செய்யூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் சித்தாமூர் வருவாய் ஆய்வாளர் சிவராமன் ஆகியோர், அச்சிறுபாக்கம் போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்.
மேலும், இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடம். மீறி ஆக்கிரமிப்பு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அங்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 4.5 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் தற்போதைய சந்தை மதிப்பு, 15 கோடி ரூபாய் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.