/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்
/
குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்
குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்
குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்
ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், குறுவை சாகுபடி தொகுப்புக்கு முதல் முறையாக, 5,000 விவசாயிகளுக்கு, தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது. இதனால், சொர்ணவாரி பருவத்தில், நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு, சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு, 34,000 ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு, டெல்டா மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குறுவை தொகுப்பு சிறப்பு மானிய திட்டத்தை, டெல்டா அல்லாத பிற மாவட்டங்களிலும் நடப்பாண்டு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பில் இயந்திர நடவு மேற்கொள்ள, 4,000 ரூபாய் நடவு மானியம் வழங்கப்படும். இது தவிர நெல் விதைகள், நெல் நுண்ணுாட்ட கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவை, 50 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு, குறுவை தொகுப்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 5,000 ஏக்கர் பரப்பிற்கு, 2 கோடி ரூபாய் நிதி வழங்கி, அரசு உத்தரவிட்டது.
இதனால், சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யும் 5,000 விவசாயிகள் பயனடையலாம். முதலில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண், குடும்ப அட்டை எண் ஆகிய விபரங்களுடன், உழவர் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும், உழவர் செயலியில் முன்பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
நடப்பாண்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுவை தொகுப்பு அரசு மானியத்தை, மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.