/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி குளறுபடிக்கு... நாங்க பொறுப்பில்லை! மாநில அரசே காரணம் என்கிறது தேசிய ஆணையம்
/
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி குளறுபடிக்கு... நாங்க பொறுப்பில்லை! மாநில அரசே காரணம் என்கிறது தேசிய ஆணையம்
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி குளறுபடிக்கு... நாங்க பொறுப்பில்லை! மாநில அரசே காரணம் என்கிறது தேசிய ஆணையம்
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி குளறுபடிக்கு... நாங்க பொறுப்பில்லை! மாநில அரசே காரணம் என்கிறது தேசிய ஆணையம்
ADDED : நவ 19, 2025 11:59 PM

கூடுவாஞ்சேரி: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான, 39 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலையை, எட்டு வழியாக விரிவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு, 270 கோடி ரூபாய் அளித்தும், அரைகுறையாகவே பணிகள் நடந்துள்ளன. பல இடங்களில் அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை; அகற்றப்பட்ட நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. விபத்துகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், 'இதற்கு நாங்கள் பொறுப்பல்ல; மாநில அரசுதான் பதில் சொல்ல வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான, 39 கி.மீ., நீளமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், நுழைதல், வெளியேறுதல் என்ற வகையில் தினமும், 3 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.
விடுமுறை நாட்களில் 5 லட்சம் வரை வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வழியாக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி பயணிக்கின்றனர்.
இந்த வழித்தடம், கடந்த 2018 முதல் 2023 வரை, படிப்படியாக, 15 அடி அகலம் உள்ள அணுகுசாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதியோடு, எட்டு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுவரை, பல இடங்களில், அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை. தவிர, மழைநீர் கால்வாய் பணிகள் துவக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு அணுகுசாலை இல்லாததால், எதிரெதிர் திசையில் வாகனங்கள் பயணித்து, விபத்துகள் நடக்கின்றன. தவிர, ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கி திணறுகின்றன.
சாலை விரிவாக்க பணிக்காக மத்திய நெடுஞ்சாலை துறையால் ஒதுக்கப்பட்ட நிதியை, மாநில நெடுஞ்சாலை துறை, முறையாக பயன்படுத்தவில்லை எனவும், இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மகேந்திரா சிட்டி முதல் மெல்ரோசாபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கும், தைலாபுரம் முதல் அய்யஞ்சேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. பல இடங்களில் அணுகு சாலை முழுமையடையாததால், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை, சாலையோர கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, தங்களுக்கான, 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி விட்டனர்.
கோரிக்கை தவிர, சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, விடுபட்டுள்ள இடங்களில் அணுகுசாலை பணிகளை விரைந்து முடித்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 39 கி.மீ., துாரம் உள்ள ஜி.எஸ்.டி., சாலை, கடந்த 2000ம் ஆண்டு வரை, இரு வழிப்பாதையாக இருந்தது. நான்கு வழி சாலையாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு, 2002 மே மாதம் பணிகள் துவக்கப்பட்டன; 2004 அக்டோபரில் பணிகள் முடிந்தன.
தொடர்ந்து போக்குவரத்து அதிகரித்ததால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையை அணுகு சாலை, மழைநீர் வடிகால் வசதியுடன், எட்டு வழி சாலையாக தரம் உயர்த்த, 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அப்போது, 'இந்த பணியை நாங்களே செய்கிறோம்' என, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, எங்களிடம் கோரிக்கை வைத்தது.
தொடர் புகார் l முதற்கட்டமாக, 2018ல், இரும்புலியூர் முதல் வண்டலுார் வரையிலான, 2.3 கி.மீ., துாரமுள்ள சாலையை, எட்டு வழி சாலையாக மாற்ற, தமிழக நெடுஞ்சாலை துறையிடம், 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டது
l 2019ல், வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான 5.3 கி.மீ., துார சாலையை, எட்டு வழி சாலையாக மாற்ற, 42.28 கோடி ரூபாய் வழங்கப்பட்டது
l கூடுவாஞ்சேரி முதல் மகேந்திரா சிட்டி வரையிலான, 13.3 கி.மீ., துாரமுள்ள சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற, 2021ல், 209 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதன்படி மொத்தம், 270 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பல இடங்களில், அணுகு சாலை அமைக்கப்படவில்லை; மழைநீர் வடிகால் பணிகள் துவக்கப்படவில்லை எனவும், சாலை விரிவாக்கத்தின்போது, அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலை துறையினர்தான் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

