/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்காமல் நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம்
/
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்காமல் நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம்
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்காமல் நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம்
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அமைக்காமல் நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம்
ADDED : ஜூலை 02, 2025 10:39 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரை, பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை மற்றும் பேருந்து நிறுத்தம் குறித்த பெயர் பலகை இல்லாததால், பயணியர் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு - பெருங்களத்துார் வரை, ஜி.எஸ்.டி., சாலையான தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக இருந்தது. அப்போது, செங்கல்பட்டு அடுத்த பரனுார், சிங்கபெருமாள்கோவில், கீழக்கரணை, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து பயணியருக்கான நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு, பேருந்துகள் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றன.
அதன் பின், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு - பெருங்களத்துார் வரை, ஆறு வழிச்சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் துவங்கிய போது, இந்த நிழற்குடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
எட்டு வழிச்சாலை விரிவாக்க பணிகள் முடிந்தும், இன்னும் பயணியர் நிழற்குடைகளை திரும்ப அமைக்காமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிடப்பில் போட்டுள்ளது.
இச்சாலை வழியாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அத்துடன், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி முடிந்து, பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் வெயில், மழையில் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
பயணியர் நிழற்குடை இல்லாததால் முதியவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில், அந்த நிறுத்தம் பற்றிய பெயர் பலகை இல்லாததால், பேருந்துகளும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, சிங்கபெருமாள்கோவில் பகுதியில் பேருந்து நிறுத்தம் குறித்த பெயர் பலகை இல்லாததால், சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வரும் போது, பேருந்து நிறுத்தம் விபரம் தெரியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை தவிர்க்க, மாநகர பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள், பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல, பேருந்து நிறுத்தங்களில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும்.
அதாவது, செங்கல்பட்டு பரனுார் முதல், பெருங்களத்துார் வரை பயணியர் நிழற்குடைகள் அமைத்து, பேருந்து நிறுத்தங்கள் குறித்து பெயர் பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.