செட்டிப்புண்ணியம் கல் குவாரி குட்டை நீர் விறுவிறு!:மறைமலை நகர் நகராட்சிக்கு வினியோக்க திட்டம்
செட்டிப்புண்ணியம் கல் குவாரி குட்டை நீர் விறுவிறு!:மறைமலை நகர் நகராட்சிக்கு வினியோக்க திட்டம்
UPDATED : செப் 21, 2026 02:55 AM
ADDED : செப் 20, 2026 08:32 PM

செங்கல்பட்டு :
செட்டிப்புண்ணியத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரை, குடிநீராக்க 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் மூலம், தினமும் 35 லட்சம் லிட்டர் குடிநீர் மறைமலை நகர் நகராட்சிக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள், ஆறு மாதத்தில் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் ஊராட்சியில், செட்டிப்புண்ணியம் கிராமம் உள்ளன. இங்கு, 300 ஏக்கர் பரப்பில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கல் குவாரி இயங்கிவருகிறது. குவாரியில் 200 அடிக்கும்மேல் ஆழத்திற்கு மேல், தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த குவாரி, 13 ஆண்டுகளுக்கு முன், கைவிடப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண, செங்கல்பட்டு அடுத்த, புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம் உள்ளிட்ட கைவிடப்பட்ட கல் குவாரி குட்டைகளில் தேங்கியிருக்கும், இயற்கையான ஊற்று மற்றும் மழைநீர் தேங்கியிருப்பதை, குடிநீராக்க அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அதிகாரிகள், மேற்கண்ட கல் குவாரி குட்டையில் இருந்து குடிநீர் எடுப்பது குறித்தான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். இதில், குவாரி தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியும் என, தெரியவந்தது.
அது தொடர்பான அறிக்கைய அதிகாரிகள் சமர்ப்பித்தும், அத்திட்டத்தை அரசு கைவிட்டது. இந்நிலையில், செட்டிப்புண்ணியம் குவாரி குட்டை குடிநீரை அங்கிருந்து 12 கீ.மீ., தொலைவில் உள்ள, மறைமலை நகர் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு நிர்வாகம் திட்டமிட்டது.
சென்னையின் புறநகர் பகுதியாக உள்ள மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். 22,898 குடியிப்புகள் மற்றும் 273 தொழிற்சாலைகள், 432 வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகராட்சியில் ஆறு வார்டுகளுக்கு, கூடுவாஞ்சேரி பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 6.24 லட்சம் லிட்டர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 24.85 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆனால், நகராட்சி மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதற்கிடையில், செட்டிப்புண்ணியத்தில் கைவிடப்பட்ட குல் குவாரியில், 2023ம் ஆண்டில், அப்போதைய கலெக்டர் அருண்ராஜ் மற்றும் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், பகுப்பாய்வு செய்யப்பட்டு குடிநீருக்கு உகந்தது என அறிக்கை பெறப்பட்டது.
மேலும், குவாரி நீரை சுத்திகரித்து மேம்படுத்த 20.14 கோடி ரூபாயை கடந்தாண்டு அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த மே மாதம் பணிகள் துவங்கி, 45 சதவீத பணிகள் முடிந்துள்ளது. செட்டிப்புண்ணியம் கைவிடப்பட்ட கல் குவாரியிலிருந்து, மறைமலைநகர் நகராட்சி பகுதிவரை 25 கி.மீ., துாரம் குழாய் அமைத்து, குடியிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும். தற்போது, 10.8 கி.மீ., துாரம் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரந்து முடிக்க, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு, கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.
மறைமலைநகர் நகராட்சியின் குடிநீர் தேவைக்காக, செட்டிப்புண்ணியத்தில் கைவிடப்பட்ட கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இதன் மூலம் தினமும் நகராட்சிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆர். லதா ஆணையர் மறைமலை நகர் நகராட்சி
தேசிய நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வனத்துறையிடம் 10 கி.மீ., துாரம் அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியில், 2,4,5,8,15,17,19, 21 ஆகிய வார்டில் உள்ள, மக்கள் பெயன் பெறுவர். இந்த வார்டுகளில், திருக்கச்சூர், குமரன் தெரு, காட்டாங்கொளத்துார், நின்னக்கரை, மறைமலையடிகள் தெரு, செங்குன்றம் உள்ளிட்ட 11 பகுதிகளில், தரைமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கு, 35 லட்சம் லிட்டர் குடிநிர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எல். பாபு பொறியாளர் மறைமலை நகர் நகராட்சி.
