சிற்ப தொழில் பாறைக்கான குவாரி ஒதுக்காமல் அரசு அலட்சியம்! மேம்பாட்டுக்கு உதவவில்லை என கலைஞர்கள் புகார்
சிற்ப தொழில் பாறைக்கான குவாரி ஒதுக்காமல் அரசு அலட்சியம்! மேம்பாட்டுக்கு உதவவில்லை என கலைஞர்கள் புகார்
UPDATED : செப் 08, 2026 07:14 AM
ADDED : செப் 07, 2026 11:35 PM

மாமல்லபுரம்: பாரம்பரிய சிற்பத்தொழிலுக்கு தேவையான பாறைகளை வெட்டி எடுக்க வசதியாக, பிரத்யேக கல்குவாரி ஒதுக்க கோரி, மாமல்லபுரம் சிற்பக்கலைஞர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொழில் மேம்பாட்டிற்கு உதவாமல் அரசு அலட்சியப்படுத்தி வருவதாக, அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை பகுதியாக மாமல்லபுரம் விளங்குகிறது. இங்குள்ள குன்றுகளில் கற்றளி, குடவரை, புடைப்பு, கட்டுமான கோவில் என, வெவ்வேறு வகையான சிற்பக் கலைகளை உருவாக்கி, அக்கால மன்னர்கள் சிற்பங்களை படைத்துள்ளனர்.
பண்டைய சிற்பக்கலைத் தொழில், தற்காலத்திலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் பிற மாவட்ட பரம்பரை சிற்பிகள் குடியேறி, சிற்பத்தொழில் செய்தனர்.
நாளடைவில் மாமல்லபுரத்தில், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி உருவாக்கப்பட்டு, ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, சிற்பத்தொழில் மேலும் மேம்பட்டு, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் இயங்குகின்றன.
இங்குள்ள சிற்பக் கூடங்களில் உள்நாடு மற்றும் பிறநாட்டு தேவைகளுக்கு, சுவாமி சிலைகள், நவீன வடிவ சிலைகள் போன்றவை வடிக்கப்படுகின்றன.
வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில், கற்சிற்பம் தொழில் உலகளவில் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்காக உலக கற்சிற்ப நகராக, புவிசார் குறியீடு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இத்தகைய பாரம்பரிய தொழிலுக்கு, குன்று, மலைகளில் உடைத்து எடுக்கப்படும் பாறை எனப்படும் பெரிய கற்கள் அவசியம். இத்தொழிலின் முக்கியத்துவம், மேம்பாடு ஆகியவை கருதி, பாறைகள் தேவைக்காக தனி கல்குவாரி ஒதுக்கக்கோரி, சிற்பக்கலைஞர்கள் அரசிடம் பல ஆண்டுகளாக முறையிட்டு வருகின்றனர்.
ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள், அலட்சியம் காட்டி வருவதாக சிற்பக் கலஞைர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, சிற்பக் கலைஞர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பல பகுதிகளில், சிற்பக்கலை தொழில் உள்ளது. மாமல்லபுரத்திற்குத்தான் கற்சிற்ப புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. சிற்ப ஏற்றுமதி மூலம், அன்னிய செலாவணி கிடைக்கிறது. பாரம்பரியான தொழிலுக்கு பாறைகள் அவசியம்.
மாதந்தோறும் சராசரியாக, 200 டன்னிற்கும் மேல், கற்கள் தேவை. தனிநபர்கள் அனுமதியின்றி வெட்டி விற்கும் கற்களையும், திருநெல்வேலி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இயங்கும் குவாரிகளில் இருந்து பாறைகளை வாங்குகிறோம்.
இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பாறைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதிக தொலைவு மற்றும் செலவுகளும் அதிகரிக்கின்றன. கோவில் திருப்பணிக்காக சிலை வடிக்க ஆர்டர் தரும் வாடிக்கையாளர்களும் தயங்குகின்றனர். வணிக ரீதியாக போட்டியோடு தான் சிலைகளை வடித்து வருகிறோம். இதேநிலை நீடித்தால், பாரம்பரியமான தொழில் முடங்கும்.
மாமல்லபுரத்தில் இருந்து குறைந்த துாரத்தில், வாலாஜாபாத் சங்கராபுரத்தில், சிலை செய்வதற்கேற்ற தரமான பாறை உள்ளது. எங்கள் தேவைக்கு கற்கள் வெட்டி எடுக்க, குவாரியாக ஒப்படைக்க அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குவாரிகளுக்கு அனுமதி அளிப்பதாக தேர்தலின்போது உறுதியளிக்கும் அரசியல் கட்சியினர், பின்னர் கண்டுகொள்வதே இல்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் முறைகேடால் முடங்கிய ஒதுக்கீடு மாமல்லபுரம் சிற்பக்கலைஞர்கள் கூறியதாவது: சங்கராபுரம் பாறையில் இருந்து எடுக்கப்படும் கற்கள் மூலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் சிலம்பு கோட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. அப்பகுதியினர், 25 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியினர் முறையான அரசு அனுமதியின்றி, பல ஆண்டுகளாக பாறைகளை வெட்டி விற்றனர். கனிமவளத் துறையினர் சுயலாபம் கருதி, நாளடைவில் கல்குவாரியாக ஏலம் விட்டு, ஜல்லிக்கற்கள் குவாரியாக சீரழித்தனர். காஞ்சிபுரம் முன்னாள் கலெக்டர் சண்முகம், அதை சிற்பத்தொழிலுக்கு ஒதுக்க முடிவெடுத்து, ஒப்பந்தம் விட ஏற்பாடு செய்தபோது, அதே ஒப்பந்தத்தில் மற்ற குவாரிகளையும் இணைத்து, கனிமவளத்துறையினர் முறைகேடு செய்ததால், ஒதுக்கீடு கைவிடப்பட்டுள்ளது.
