/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் வியாபாரிகளின் நெல் இரவு நேரத்தில் கொள்முதல் முறைகேடு அரசு கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் 'வசூல்'
/
தனியார் வியாபாரிகளின் நெல் இரவு நேரத்தில் கொள்முதல் முறைகேடு அரசு கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் 'வசூல்'
தனியார் வியாபாரிகளின் நெல் இரவு நேரத்தில் கொள்முதல் முறைகேடு அரசு கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் 'வசூல்'
தனியார் வியாபாரிகளின் நெல் இரவு நேரத்தில் கொள்முதல் முறைகேடு அரசு கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் 'வசூல்'
ADDED : ஏப் 28, 2025 10:47 PM

செய்யூர், :செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இரவு நேரத்தில் முறைகேடாக, தனியார் நெல் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், இதுபோன்ற முறைகேடில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா, நவரை சாகுபடியில் பொன்னி, பி.பி.டி., குண்டு, என்.எல்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு ரக நெல் பயிரிடப்படுகிறது.
தற்போது, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், செய்யூர் வட்டத்தில் 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அறுவடை செய்யப்படும் நெல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
செய்யூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை முடிந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது, சட்டத்திற்கு புறம்பான முறையில் இரவு நேரத்தில், விவசாயிகளை தவிர்த்து, தனியார் நெல் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
தனியார் வியாபாரிகள், ஏற்கனவே விவசாயிகளிடம் குறைந்த தொகை கொடுத்து வாங்கி சேமித்து வைத்திருந்த நெல் மூட்டைகள், லாரிகள் வாயிலாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக செய்யூர், சித்தாமூர், சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில், இதுபோன்ற முறைகேடு அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்குவதற்கு முன் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள் பாதுகாத்து வைக்க இடவசதி இல்லாமல், தனியார் நெல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் சேமித்து வைக்கும் தனியார் நெல் வியாபாரிகள், தங்களுக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள், நெல் கொள்முதல் நிலையத்தில் நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகளின் உதவியுடன், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையத்தை நடத்தும் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், நெல் பயிரிடப்படாத நிலங்களை வருவாய்த் துறையினரிடம் வாயிலாக கண்டறிகின்றனர்.
அந்த நிலத்திற்கு அடங்கல் பெற்று, ஆன்லைனில் தங்களது உறவினர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களின் பெயரில் விவசாயிகள் போல் விண்ணப்பித்து, தனியார் வியாபாரிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு அரசிடம் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணத்தை பெற்று, அதிலிருந்து தங்கள் 'கமிஷன்' தொகையை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை தனியார் நெல் வியாபாரிகளுக்கு வழங்குகின்றனர்.
ஆண்டுதோறும் இது ஒரு தொழிலாகவே மாறி வருகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தாலும், பெயரளவில் ஆய்வு செய்கின்றனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளுக்காக அரசு சார்பில் துவக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், இதுபோன்று வியாபாரிகள் முறைகேடில் ஈடுபடுவது, பல்வேறு வகையில் விவசாயிகளை பாதிக்கும். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாரியகள் எதிர்பார்க்கின்றனர்.