/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புனரமைப்பு பணிகள் பெயரில் நகராட்சி நிர்வாகம்... அட்டூழியம்: நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரியில் பாதி ஆக்கிரமிப்பு
/
புனரமைப்பு பணிகள் பெயரில் நகராட்சி நிர்வாகம்... அட்டூழியம்: நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரியில் பாதி ஆக்கிரமிப்பு
புனரமைப்பு பணிகள் பெயரில் நகராட்சி நிர்வாகம்... அட்டூழியம்: நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரியில் பாதி ஆக்கிரமிப்பு
புனரமைப்பு பணிகள் பெயரில் நகராட்சி நிர்வாகம்... அட்டூழியம்: நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரியில் பாதி ஆக்கிரமிப்பு
ADDED : அக் 23, 2025 09:50 PM

நந்திவரம்:ந்திவரம் -- -கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள கண்டிகை தாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏரியின் பரப்பை கூடுதலாக ஆக்கிரமிக்கும் வகையில் புனரமைப்பு பணிகள் நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 சதுர கி.மீ., பரப்பில் உள்ளது. இங்குள்ள 30 வார்டுகளில், 258 தெருக்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நீராதாரம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி தாலுகா அலுவலகம் அருகே, சர்வே எண் 252/1ல், 11.24 ஏக்கர் பரப்பில் கண்டிகை தாங்கல் ஏரி உள்ளது.
கிருஷ்ணாபுரம், ராணி அண்ணா நகர், மலைமேடு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த ஏரியில் தேங்கும்.
சுற்றுப் பகுதி மக்களுக்கும், ஏரியை ஒட்டி அமைந்துள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் சாகுபடிக்கும், இந்த ஏரி நீராதாரமாக இருந்தது.
கடந்த 1990ம் ஆண்டிற்குப் பின் நடந்த நகரமயமாக்கல் காரணமாக, ஏரியின் மேற்கு, தெற்கு பகுதிகள் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டன.
இதனால், கடந்த 30 ஆண்டுகளில், ஏரியின் மொத்த பரப்பில் 50 சதவீதம் கட்டடங்களாக மாறிவிட்டன.
தவிர, ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கண்டிகை தாங்கல் ஏரியில் கலந்து, அதன் இயல்பு தன்மை மாறி, அழிவின் விளிம்பிற்குச் சென்றது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, 2024 செப்டம்பரில், 1.36 கோடி ரூபாய் செலவில் ஏரியை புனரமைக்கும் பணிகளை, நகராட்சி நிர்வாகம் துவக்கியது. ஏரியின் கரைகளை பலப்படுத்தி, தேங்கும் மழைநீரை மறுசுழற்சி செய்யவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், 12 மாதங்கள் முடிந்த பின்னரும், இதுவரை இந்த ஏரியில், துார்வாருதல் உள்ளிட்ட எவ்வித புனரமைப்பு பணிகளும் நடக்கவில்லை.
மாறாக, நடைபாதை அமைப்பதற்காக, ஏரியின் உட்பகுதியில் 15 அடி அகலம், 20 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு, ஏரியின் பரப்பு மேலும் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இதனால், கண்டிகை தாங்கல் ஏரியில் நீர் தேக்கும் பரப்பு குறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும்.
எனவே, ஏரியின் உட்பகுதியில் நடைபாதை அமைக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
கோரிக்கை தவிர, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. கழிவுநீர் கலந்தால் மட்டுமே, நீர் நிலையில் ஆகாய தாமரை படரும்.
எனவே, ஏரியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கண்டிகை தாங்கல் ஏரி, மொத்தம் 11.24 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இதில் 6 ஏக்கர் பரப்பு முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 5.24 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது.
நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகள் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறி முறைகளையும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தையும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் மதிக்கவில்லை.
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி, 2018ம் ஆண்டு ஜூன் 16 மற்றும் 2024 செப்., 20 ஆகிய தேதிகளில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்தாண்டு செப்., மாதம், ஏரியை புனரமைக்க 1.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும், இது வரையில் எவ்வித புனரமைப்பு பணிகளும் நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என்றும் தெரியவில்லை.
மாறாக, ஏரிக்கரையோரம் உட்பகுதியில், 7 அடி அகலத்தில், 300 மீ., நீளத்தில், 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்க, 15 அடி அகலத்தில், 20 அடி ஆழத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது.
அதிகாரம் இல்லை இதனால், கண்டிகை தாங்கல் ஏரியின் பரப்பளவு தற்போது இருக்கும் அளவை விட 20 சதவீதம் சுருங்கும்.
தொடர் ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பாதி பரப்பு சுருங்கிவிட்ட நிலையில், தற்போது நடைபாதை அமைக்க கூடுதலாக 20 சதவீத பரப்பு சுருக்கப்படுவது, ஏரியை காணாமல் போக செய்வதற்கான முயற்சியாகவே உள்ளது.
நீர்நிலையின் பரப்பை சுருக்கவோ, நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பை சுருக்கவோ, நகராட்சிக்கு அதிகாரம் கிடையாது.
அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு நாம் வழங்கிடும் கொடை, இயற்கை வளங்கள் மட்டுமே.
எனவே, நகராட்சி நிர்வாகம், எவ்வித பாரபட்சமுமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் பின் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஏரியை புனரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.