/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்... குற்றச்சாட்டு! 'மக்களுக்கான கூட்டமில்லை' என அ.தி.மு.க., வெளிநடப்பு
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்... குற்றச்சாட்டு! 'மக்களுக்கான கூட்டமில்லை' என அ.தி.மு.க., வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்... குற்றச்சாட்டு! 'மக்களுக்கான கூட்டமில்லை' என அ.தி.மு.க., வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்... குற்றச்சாட்டு! 'மக்களுக்கான கூட்டமில்லை' என அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : அக் 22, 2024 07:50 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் உரக்கிடங்குகளின் செயல்பாடு படுமோசமாக உள்ளதாக, தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கண்டனம் தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
: தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
காமராஜ், தி.மு.க., 4வது மண்டல தலைவர்: அனகாபுத்துார் பகுதியில், பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்ததாரர் வாயிலாக பணி மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல், தாம்பரத்திலும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு அளிக்கும்பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
பல டன் குப்பை
அதனால், அனகாபுத்துாரை போல், தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒப்பந்ததாரர் வாயிலாக இணைப்புகளை கொடுத்து, திட்டத்தை முடிக்க வேண்டும்.
மாநகராட்சியில், பசுமை உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவை முறையாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், தாம்பரம் கன்னடப்பாளையத்திற்கு தினமும் பல டன் குப்பை வருகிறது.
பசுமை உரக்கிடங்குகள் முறையாக செயல்பட்டால், இவ்வளவு குப்பை வர வாய்ப்பில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும், மாநகராட்சி பணத்தை செலவு செய்து, உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அதனால், உரக்கிடங்குகளை ஆய்வு செய்து, அவை முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: தாம்பரம் மாநகராட்சி என்பது, 70 வார்டுகளுக்கும் பொதுவானது. ஆனால், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், எந்த பணியும் நடக்கவில்லை.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக மனு கொடுத்தாலும், அப்பணியை செய்வதில்லை. இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மக்களுக்கான கூட்டம் போல் இல்லை. தீபாவளி பட்ஜெட் கூட்டம் போல் உள்ளது.
இந்த கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
தாமோதரன், தி.மு.க.: தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சேலையூர் காவல் நிலையம் முதல் கேம்ப் சாலை சந்திப்பு வரை, மாதத்தில் 30 நாட்களும், சாலையில் பாதாள சாக்கடை ஓடுகிறது.
நாசமானது
ஒரு இயந்திர நுழைவு வாயிலை அடைத்தால், அடுத்த நுழைவு வாயிலில் கழிவுநீர் கசிகிறது. இதனால், மக்கள் தினமும் பாதிப்படைகின்றனர். பல முறை புகார் தெரிவித்தும், இதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
சாலையும் சீர்குலைந்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர் குமரன் பூங்காவை, 5 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தும், முறையான பராமரிப்பின்றி நாசமாகிவிட்டது.
இந்திரன், தி.மு.க., 5வது மண்டல தலைவர்: தாம்பரம் - வேளச்சேரி சாலையில் நிலவும் பாதாள சாக்கடை பிரச்னை விஷயத்தில், கமிஷனர் கவனம் செலுத்தி, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசி, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், 5வது மண்டலத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதி, பின்தங்கிய பகுதியாகும். அதனால், அந்த பகுதியில், கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
யாக்கூப், ம.ம.க.: கடப்பேரி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மூன்று கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை. பணி செய்துவிட்டதாக, அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர். அல்லது மேயருக்கு தெரியவில்லையா என்பது புரியவில்லை.
ராஜினாமா செய்ய தயார்
கடப்பேரி ஏரியில், ஒட்டுமொத்த மழைநீரும், மருத்துவ கழிவுகளும் கலந்து, நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. கழிவுநீர் கலந்த தண்ணீரை தான் பயன்படுத்துகிறோம்.
கால்வாயை சுத்தம் செய்யாததால், இந்த மழையில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. மேயருக்கு, அதிகாரிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.
கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளதை நிரூபித்தால், இந்த நிமிடமே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.
நடவடிக்கை
தி.மு.க., கூட்டணியில் இருந்தும், என் வார்டை வேண்டும் என்றே புறக்கணித்து வருகின்றனர். இதை கண்டித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.
கருணாநிதி, தி.மு.க., 1வது மண்டல தலைவர்: பம்மல், விஷ்வேசபுரம் கிடங்கில், டன் கணக்கில் குப்பை தேங்கி, அப்பகுதியே நாற்றம் அடிக்கிறது. 10வது வார்டில், 29 தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம்தோண்டி அப்படியே கிடக்கிறது.
அதனால், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை பணி முடிந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குப்பை பிரச்னைக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.