/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காயார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
/
காயார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
UPDATED : அக் 29, 2025 03:29 AM
ADDED : அக் 28, 2025 09:54 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், காயார் கிராமத்தில் சட்டம் - ஒழுங்கு பணிகளை மேற்கொள்வதற்காக, 2015ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இக்காவல் நிலைய எல்லையில் காயார், வெண்பேடு, பனங்காட்டுப்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட 27 கிராமங்கள் அடங்கியுள்ளன.
திருப்போரூர் காவல் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டதால், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில், இந்த காவல் நிலையம் இருந்து வந்தது.
இக்காவல் நிலையத்தில், ஒரு எஸ்.ஐ., 14 போலீசார் என, 15 பேர் பணிபுரிந்து வந்தனர்.
இக்காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சில கிராமங்கள், நீண்ட துாரத்தில் உள்ளன. கீரப்பாக்கம், முருகமங்கலம் போன்ற கிராமங்களில், 3,000க்கும் மேற்பட்ட வீட்டு வசதி வாரிய வீடுகள் உருவாகியுள்ளன.
நாளுக்கு நாள், குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த காவல் நிலையத்தை இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தி, தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இந்த காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருதப்பன் என்பவர், புதிய இன்ஸ்பெக்டராக காயார் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

