/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.65 கோடியில் சாலை பணி துவக்கம் 3 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்
/
ரூ.65 கோடியில் சாலை பணி துவக்கம் 3 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்
ரூ.65 கோடியில் சாலை பணி துவக்கம் 3 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்
ரூ.65 கோடியில் சாலை பணி துவக்கம் 3 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்
ADDED : மார் 17, 2024 01:59 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம் உட்கோட்டங்கள் உள்ளன.
மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சாலை 291.7 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் 763.754 கி.மீ., முக்கிய மாவட்ட சாலை 221.840 கி.மீ., என, மொத்தம் 1,277.294 கி.மீ., சாலைகள் உள்ளன. இதை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழை காரணமாக, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., பழைய மாமல்லபுரம் சாலைகள் - ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள், சிறுபாலங்கள் இடிந்து விழுந்தன.
இந்த சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், மழையில் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறுபாலங்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின், சாலைகள், சிறுபாலங்கள் சீரமைக்க, 100 கோடி ரூபாய் நிதி கேட்டு அரசுக்கு கருத்துருவை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சாலைகள், சிறுபாலங்கள், மழைநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பணிகள் செய்ய, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத் துறைக்கு, கடந்த பிப்., மாதம் அரசு உத்தரவிட்டது.
அதன்பின், திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் 2 கி.மீ., சாலை, 8 கோடி ரூபாய், சிறுசேரி -- படூர் வரை 2.5 கி.மீ., 7 கோடி ரூபாய், தையூரில் சிறுபாலம் அமைக்க, 5 கோடி ரூபாய் உள்ளிட்ட 51 பணிகள் செய்ய, 65 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க அறிவுறத்தப்பட்டு உள்ளது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

