/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் அவசியம்
/
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் அவசியம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் அவசியம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் அவசியம்
ADDED : ஏப் 10, 2025 02:03 AM

திருப்போரூர்:திருப்போரூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்படுகிறது.
இதன் கீழ், திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம், சிறுதாவூர் உள்ளிட்ட 50 ஊராட்சிகளில் 163 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திட்ட அலுவலர், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், 98 சதவீதம் பெண் பணியாளர்களே பணிபுரிகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி வாயிலாக, 6 வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி கற்பித்தல், குழந்தைகளை பாதுகாத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து, சுகாதாரம் போன்ற சேவை வழங்குதல், கிராம செவிலியருடன் சொட்டு மருந்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், அலுவலக பணியாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் அனைத்து பணப் பலன்களும், இந்த அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 163 அங்கன்வாடி மையங்களின் தலைமை அலுவலகமான இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கடந்த 1986ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த கட்டடம், தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் ஊழியர்கள் உட்பட அனைவரும் அவதிப்பட்டனர்.
எனவே, பாதுகாப்பு கருதி, பழைய வேளாண் கட்டடத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டது.
இங்கு, அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடத்துவதிலும், ஊட்டச்சத்து பொருட்களை சேகரித்து வழங்குவதற்கும் போதிய இடவசதி இல்லை.
அதேபோல் கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. தற்போது இந்த கட்டடத்தில் கூடுதலாக ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டு செயல்படுகிறது.
இந்த சேவைக்கு வருபவர்களுக்கும் இடவசதி இல்லை. மாதாந்திர கூட்டம் போன்ற முக்கிய பணிகளின் போது, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
போதிய கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இல்லாததால், அருகே உள்ள பி.டி.ஓ., அலுவலகத்திற்குச் சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, திருப்போரூர் ஒன்றிய அங்கன்வாடி மையங்களின் தலைமை அலுவலகமான இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு, அடிப்படை வசதிகளுடன் விசாலமான புதிய கட்டடத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அதுவரை, தற்போது உள்ள கட்டடத்தில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

