/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இது சாலையா... மரண பள்ளமா... பம்மல் - அனகாபுத்துார்வாசிகள் பீதி
/
இது சாலையா... மரண பள்ளமா... பம்மல் - அனகாபுத்துார்வாசிகள் பீதி
இது சாலையா... மரண பள்ளமா... பம்மல் - அனகாபுத்துார்வாசிகள் பீதி
இது சாலையா... மரண பள்ளமா... பம்மல் - அனகாபுத்துார்வாசிகள் பீதி
ADDED : அக் 23, 2024 01:26 AM

பம்மல்:தாம்பரம் மாநகராட்சி, அனகாபுத்துார், பம்மல் பகுதிகளில் உள்ள சாலைகள், மரண பள்ளங்களாக மாறியுள்ளதால், மக்கள் உயிருக்கு பயந்து பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, பம்மல் - அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
சாலைகளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் இடங்களில், பணிகள் முடிந்த பிறகு, பள்ளத்தை முறையாக மூடுவதில்லை.
இதனால், சாலைகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டன.
லேசான மழை பெய்தாலே நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லாத நிலைமைக்கு மாறி, மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மரண பள்ளங்களாகவும், சேறும் சகதியுமாகவும் சாலை மாறிவிட்டதால், அதில் பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது. அப்படிச் செல்லும் போது சேற்றில் சிக்கி விழுவதும், காயமடைவதும் நடக்கிறது. முதியவர்கள், மாணவர்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், பெரும்பாலான உட்புற சாலைகளில் நிலைமை, இப்படியே உள்ளது. மற்றொருபுறம், பல்லாவரம் - குன்றத்துார் சாலையும் குண்டும், குழியுமாக மாறி, வாகன பயன்பாட்டிற்கு தகுதியில்லாத சாலையாகவே மாறிவிட்டது.
இதில் செல்பவர்கள், மண் துாசியால் மூச்சுத்திணறல், முதுகுவலி, தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
பணி முடிந்தவுடன், சாலையை முறையாக சீரமைத்திருந்தால், மக்களுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே முழு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படியே சென்றால், அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறி, மக்கள் வீடுகளை காலி செய்யும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
அதனால், உயரதிகாரிகள் இதில் தலையிட்டு, பணி முடிந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க முன்வர வேண்டும் என, அனகாபுத்துார் - பம்மல் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.