/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்நடை துறை இணை இயக்குநர் ஆபீஸ் காஞ்சியில் இருந்து செங்கைக்கு மாற்றம்
/
கால்நடை துறை இணை இயக்குநர் ஆபீஸ் காஞ்சியில் இருந்து செங்கைக்கு மாற்றம்
கால்நடை துறை இணை இயக்குநர் ஆபீஸ் காஞ்சியில் இருந்து செங்கைக்கு மாற்றம்
கால்நடை துறை இணை இயக்குநர் ஆபீஸ் காஞ்சியில் இருந்து செங்கைக்கு மாற்றம்
UPDATED : ஜூலை 19, 2025 08:24 AM
ADDED : ஜூலை 18, 2025 10:36 PM
செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை பிரித்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, சிட்டலப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 61 கால்நடை மருத்துவமனைகள், 24 கால்நடை மருந்தகங்கள், 24 கால்நடை கிளை மருந்தகங்கள் உள்ளன.இங்கு மாடு, எருமை, நாய், பன்றி, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசிகள், மருந்துகளை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை பிரித்து, அரசு உத்தரவிட்டது.
ஐந்து ஆண்டுகள்
அதன் பின், கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், செங்கல்பட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், செங்கல்பட்டுக்கான கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, காஞ்சிபுரத்திலேயே இயங்கி வந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளவர்கள் கால்நடைகள், கோழி ஆகியவற்றை மானியத்தில் பெறுவதற்கு, காஞ்சிபுரத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, பரிசீலனை செய்த பிறகே, பயனாளிகளுக்கு உதவிகள் கிடைத்து வந்தன. காஞ்சிபுரத்திற்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து விண்ணப்பிக்கும் போது, பயனாளிகளுக்கு பொருள் விரயம், கால விரயம் ஏற்பட்டது.
அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்திற்குத் தேவையான கால்நடை மருந்து, தடுப்பூசிகள் அனைத்தும், காஞ்சிபுரத்தில் இருந்து எடுத்து வர வேண்டும்.
கோரிக்கை
அதன் பின், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு அனுப்பி வருவது வழக்கம். இது போன்ற சிக்கல்களால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்ட கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தை, செங்கல்பட்டுக்கு மாற்ற வேண்டும் என, அப்போதைய கலெக்டர் அருண்ராஜ், அரசுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து, காஞ்சிபுரத்தில் இருந்த கால்நடைத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை பிரித்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றி, கடந்த மே 31ம் தேதி அரசு உத்தரவிட்டது.
சலுகை
இதையடுத்து தற்போது, செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனை வளாகத்தில், தற்காலிகமாக கால்நடைத் துறை இணை இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, அரசின் அனைத்து சலுகைகளையும், எளிதில் பெற முடியும். அத்துடன், மாவட்டத்தில் கால்நடை உற்பத்தியை பெருக்கும் வகையில், இந்த அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் எதிர்பார்க்கின்றனர்.