/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
/
கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
ADDED : பிப் 16, 2024 12:26 AM

திருப்போரூர்:செங்கை மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிறப்பு வழிபாடு
இக்கோவிலில், நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இது தவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
அந்த வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதற்காக, பிரத்யேகமாக நேற்று முன்தினம் தயாரித்த கொடி கயிற்றை கொண்டு கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.
அதிகாலை 4:30 மணிக்கு, கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் கந்தா, சரவணா, அரோகரா கோஷத்துடன், அதிகாலை 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
தாழம்பூர் திரிசக்தி அம்மன்
சென்னை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள திரிசக்தி அம்மன் கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதற்காக, கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கொடி மரத்தில் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
முக்கிய விழாவாக, 18ம் தேதி, 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி யாக வழிபாடும், 23ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறுகின்றன. அதன்பின், 25ம் தேதி, விடையாத்தி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.