/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொக்கிலமேடு மீனவர் சபை கட்டுப்பாடு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு
/
கொக்கிலமேடு மீனவர் சபை கட்டுப்பாடு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு
கொக்கிலமேடு மீனவர் சபை கட்டுப்பாடு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு
கொக்கிலமேடு மீனவர் சபை கட்டுப்பாடு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 26, 2024 01:05 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன் மனைவி ராஜாத்தி. ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். கழிவுநீர் வெளியேற்ற, பழைய வடிகால்வாயை உயர்த்தி கட்டுவது தொடர்பாக, மீனவர்கள் சிலர், ராஜாத்தியிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசில் ராஜாத்தி புகார் அளித்து, பின் திரும்ப பெற்றார். இதையடுத்து, மீனவர் சபை கட்டுப்பாட்டை அவர் மீறியதாக, மீனவ சபையினர் கோபம் அடைந்தனர்.
அவரது குடும்பத்தினர், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட குடும்பத்தினரையும், ஊரை விட்டு விலக்கியும், கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், மீனவ சபையினர் கட்டுப்பாடு விதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீடிக்கும் பிரச்னை குறித்து, கடந்த ஜூலை 18ம் தேதி, மற்றும் கடந்த 20ம் தேதி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, சப் - கலெக்டர் நாராயணசர்மா, கடந்த 23ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என, மீனவ சபையினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஊரில் இருந்து விலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடும்பத்தினர், மறுநாள் முதல் மீன்பிடிக்க செல்லுமாறு, சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.
நேற்று முன்தினம், குறிப்பிட்ட குடும்பத்தினர் மீன்பிடிக்க சென்று திரும்பிய படகுகள், டிராக்டர் வாயிலாக கரைக்கு இழுக்கப்பட்டன. அவர்கள் படகை இழுத்த டிராக்டர், தங்களுக்கு வேண்டாம் எனக் கூறி, டிராக்டரையும் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
ஏழு குடும்பத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா, அவை நீடிக்கிறதா என்பது குறித்து, தாலுகா, வட்டார வளர்ச்சி, மீன்வளம் உள்ளிட்ட நிர்வாகத்தினர், விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக, வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், வெங்கடேசனின் மகள் மோனிஷா, தங்கள் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள், நேற்று முன்தினம் மாலை தெருவில் நடந்து சென்ற தன்னை, ஆபாசமாக பேசி அச்சுறுத்தியதாக, மாமல்லபுரம் போலீசில், நேற்று புகார் அளித்துள்ளார்.

