/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அழிவின் விளிம்பில் கொளப்பாக்கம் ஏரி பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம்
/
அழிவின் விளிம்பில் கொளப்பாக்கம் ஏரி பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம்
அழிவின் விளிம்பில் கொளப்பாக்கம் ஏரி பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம்
அழிவின் விளிம்பில் கொளப்பாக்கம் ஏரி பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஆக 19, 2025 12:21 AM

கொளப்பாக்கம்,அழிவின் விளிம்பில் உள்ள கொளப்பாக்கம் ஏரியை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் நான்கு வார்டுகள், கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளன.
கொளப்பாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 74ல், வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், 33.33 ஹெக்டேர் பரப்பில், கொளப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.
மழைக்காலத்தில் கீரப்பாக்கம், ஊனமாஞ்சேரி ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் நிரம்பினால், அவற்றின் உபரி நீர் கொளப்பாக்கம் ஏரியை வந்தடையும். இது தவிர, வண்டலுார் காப்புக்காடு வழியாகவும், கொளப்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உண்டு.
முன், இந்த ஏரியின் நீரை நம்பி, கொளப்பாக்கம் மற்றும் நெடுங்குன்றம் கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயம் நடந்து வந்தது.
அதன் பின், நகரமயமாக்கல் காரணமாக, விவசாய தொழிலை பலர் கைவிட்டனர். விவசாய நிலங்களும் வீட்டு மனைகளாக மாறியதால், ஏரியின் தேவை சுருங்கியது.
இதையடுத்து, ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து, கரையோர பகுதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் வசம் சென்றன.
எஞ்சியுள்ள ஏரி, தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக, கொளப்பாக்கம் ஏரியில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஏரி துார் வாரப்படாமல், சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ள நிலையில், தற்போதும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
அழிவின் விளிம்பை நோக்கி பயணிக்கும் இந்த ஏரியை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.