/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டம் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய உத்தரவு
/
செங்கையில் சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டம் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய உத்தரவு
செங்கையில் சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டம் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய உத்தரவு
செங்கையில் சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டம் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய உத்தரவு
ADDED : மே 31, 2025 11:54 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் நிலையங்களை ஆய்வு செய்ய, வருவாய் கோட்டாட்சியர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.
எஸ்.பி., சாய் பிரணித், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும், சப் - கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், நெடுஞ்சாலைத்துறையினர் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், மகேந்திர வேர்ல்ட் சிட்டி - மறைமலைநர் பகுதிகளில், விபத்துகள் அதிகமாக நடைபெறுவதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் இணைந்து கூட்டாய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ஆப்பூர், தெள்ளிமேடு, சேந்தமங்கலம் ஆகிய பகுதியில், மின் விளக்குகள் இல்லாததால், திருட்டு மற்றும் பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் ரீதியான சம்பவங்கள் நடைபெறுவதாக, பாலுார் போலீசார் தெரிவித்தனர்.
இதை தடுக்க, மேற்கண்ட பகுதியில், மின் விளக்குகள் உடனடியாக அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரப்பாக்கம், செட்டிப்புண்ணியம் பகுதியில், கல் குவாரிகள் மூடப்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு வேலி அமைக்க, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்த விபரங்களை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.