/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை கர்ப்பமாக்கிய 2வது தந்தைக்கு 'ஆயுள்'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய 2வது தந்தைக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 12, 2025 12:13 AM
செங்கல்பட்டு:சிறுமியை கர்ப்பமாக்கிய இரண்டாவது தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
சென்னை, கிண்டி மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர், 15 வயது சிறுமி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிறுமியின் தந்தை, மனைவியை விட்டு பிரிந்து சென்றார். இதன்பின் சிறுமி, தன் தாய், தாத்தா - பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார்.
அப்போது, சிறுமியின் தாய்க்கு விஜய் லுாயிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவது திருமணம் செய்து, அதே வீட்டிலேயே வசித்து வந்தனர். சிறுமியின் தாய் ஞாயிற்றுக்கிழமைகளில், அவரது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் லுாயிஸ், 2022 பிப்., 7ல், மகள் முறை என்றும் பாராமல், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
சிறுமியிடம் விசாரித்த போது, விஜய் லுாயிஸ் தன்னை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, கிண்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, விஜய் லுாயிசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.டி.என்.ஏ., பரிசோதனையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு விஜய் லுாயிஸ்தான் காரணம் என்பது உறுதியானது.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், விஜய் லுாயிசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால், ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.