/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
215 ஆன்லைன் மோசடி வழக்குகளில் இழப்பு ரூ.22.49 கோடி!:இதுவரை ரூ.97.87 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
/
215 ஆன்லைன் மோசடி வழக்குகளில் இழப்பு ரூ.22.49 கோடி!:இதுவரை ரூ.97.87 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
215 ஆன்லைன் மோசடி வழக்குகளில் இழப்பு ரூ.22.49 கோடி!:இதுவரை ரூ.97.87 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
215 ஆன்லைன் மோசடி வழக்குகளில் இழப்பு ரூ.22.49 கோடி!:இதுவரை ரூ.97.87 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
UPDATED : ஜன 13, 2024 01:00 AM
ADDED : ஜன 13, 2024 12:59 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு
மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், ஆன்லைன் மோசடியில் பணத்தை
இழந்ததாக, சைபர் கிரைம் போலீசில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் வாயிலாக, ௨௨.௪௯ கோடி ரூபாய் சம்பந்தப்பட்டோர் இழந்துள்ளதாகவும்,
அதில் 97.87 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
அலைச்சல்
சிறு பெட்டிக்கடை, மளிகை கடை முதல் பெரிய அளவிலான வங்கி பரிவர்த்தனை வரை, இணைய வழியிலேயே நடைபெறுவதால் மக்களுக்கு அலைச்சல், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால், பெரும்பாலானோர் தங்கள் மடிக்கணினி, மொபைல் போன் வாயிலாகவே பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.
அதன் வாயிலாக, அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்வதும், அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த குற்றச்செயல்களில் வட மாநில இளைஞர்களே அதிக அளவில் ஈடுபடுகின்றனர். தொழில் ரீதியாகவும் மோசடி நடக்கிறது.
இளம்பெண்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா வேர்ல்ட் சிட்டி, கல்பாக்கம் அணுபுரம், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இருந்து, கடந்தாண்டில், சைபர் கிரைம் போலீசாருக்கு, அதிக அளவிலான புகார்கள் வந்தன.
இந்த புகாரில், ஆன்லைன் வாயிலாக அதிக லாபம் கிடைப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், இளம்பெண்கள், இளைஞர்களிடம் ஆர்வத்தை துாண்டி, வட மாநில வாலிபர்கள் தங்களின் வங்கி கணக்கில் பணத்தை பெறுகின்றனர்.
அதன்பின், அவர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும்போது, சுவிட்ச் ஆப் செய்யப்படுகின்றன.
சில ஆண்டுகளாக, வட மாநில வாலிபர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் மொபைல் போன்களுக்கு ஒரு வீடியோ அனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ய சொல்கின்றனர்.
அதன்பின், ஆன்லைன் வாயிலாக, 2,000 ரூபாய் செலுத்தினால், ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என, ஆசையை துாண்டுகின்றனர்.
இதை நம்பி, இளைஞர்கள் பல லட்சம் ரூபாய் பணத்தை செலுத்துகின்றனர். அதன்பின், சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தியவர்களுக்காகவே, போலியான இணையதளம் ஒன்றை துவக்குகின்றனர்.
வட மாநிலம்
இந்த இணையதளத்தில், 3 லட்சம் ரூபாய் செலுத்தினால், 6 லட்சம் கிடைக்கும் என, நம்ப வைக்கின்றனர். இதன் வாயிலாக, பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளும் வட மாநில மோசடி கும்பல், திடீரென இணையத்தை முடக்கி விட்டு மாயமாகிறது.
அதன்பின் தான், பணம் செலுத்தியவர்களுக்கு, தாங்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்தது தெரியவருகிறது. மாவட்டத்தில், 2021ம் ஆண்டு 15 வழக்குகளும், 2022ம் ஆண்டு 36 வழக்குகளும், 2023ம் ஆண்டு 164 வழக்குகள் என, மொத்தம் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சி.எஸ்.ஆர்., எண்: 2096 மனு ரசீது பதிவுப்படி, மூன்று ஆண்டுகளில், 22 கோடியே 49 லட்சத்து 27 ஆயிரத்து 688 ரூபாய் பணத்தை, ஆன்லைன் போசடி பேர்வழிகளிடமும் மக்கள் இழந்துள்ளனர்.
வங்கியில், 23 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 206 ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில், இதுவரை 97 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மீட்கப்பட்டு, பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். அன்னிய நபர்களிடம், ஓ.டி.பி., உள்ளிட்ட ரகசிய குறியீட்டு விபரங்களை தெரிவிக்க வேண்டாம். வாட்ஸாப்பில் வரும் தகவல்களை நம்பி, ஆன்லைனில் முதலீடு செய்யக்கூடாது. ஆன்லைன் வாயிலாக பாதிக்கப்பட்டால், www.cybercrime.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி, தங்கள் புகார்களை பதிவிடலாம். சைபர் குற்றவாளிகள் வாயிலாக ஏற்பட்ட நிதியிழப்பு புகார்களுக்கு, 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம். பணம் இழந்தவர்களுக்கு மீட்டு கொடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள், செங்கல்பட்டு.