/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு...பாதுகாப்பு: l5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
/
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு...பாதுகாப்பு: l5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு...பாதுகாப்பு: l5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு...பாதுகாப்பு: l5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
UPDATED : மே 10, 2025 05:17 AM
ADDED : மே 10, 2025 02:00 AM
செங்கல்பட்டு:மாமல்லபுரத்தில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டையொட்டி, 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டுமென, போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில், வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நாளை நடக்கிறது.
இவ்விழாவில் வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
மாநாட்டில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும். கடற்கரை பகுதியில், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், முக்கிய சந்திப்புகளில், தற்காலிகமாக மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்.
வன்னியர் சங்க மாநாடு நடைபெறும் பகுதியை தாம்பரம் கமிஷனர், செங்கல்பட்டு எஸ்.பி., ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சாலைகளில், கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தற்காலிகமாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு சப் - கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும்.
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள தாசில்தார்கள் ஆகியோர் மாவட்டம் முழுதும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
போலீஸ் குவிப்பு
வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் தமைமையில், டி.ஐ.ஜி., கிஷா மிட்டல் மற்றும் 14 எஸ்.பி., உள்ளிட்ட, 5,200 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட காவல் அலுவலகம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு ஆகிய பகுதியில், காவல் காட்டுப்பாட்டு அறைகளில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்படும்.
முக்கிய இடங்களில், 75 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் இடத்தின் அருகில், ஐந்து '108' ஆம்புலன்கள் நிறுத்தப்பட உள்ளன.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டால், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்கலாம். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும், மாநாட்டு வாகனங்கள் செல்ல வேண்டும் என, மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.