/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை 3டி லேசர் ஒளி - ஒலி திட்டத்திற்கு... எதிர்ப்பு! அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்
/
மாமல்லை 3டி லேசர் ஒளி - ஒலி திட்டத்திற்கு... எதிர்ப்பு! அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்
மாமல்லை 3டி லேசர் ஒளி - ஒலி திட்டத்திற்கு... எதிர்ப்பு! அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்
மாமல்லை 3டி லேசர் ஒளி - ஒலி திட்டத்திற்கு... எதிர்ப்பு! அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்
ADDED : மே 28, 2024 06:38 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் 3டி லேசர் ஒளி - ஒலி கட்டமைப்புகள், ஸ்தலசயன பெருமாள் கோவில் மற்றும் பாரம்பரிய அர்ஜுனன் தபசு சிற்ப பகுதி சூழலுக்கு இடையூறாக அமைக்கப்படுவதாக, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொல்லியல் துறையினர் அளித்த புகாரின்படி,அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொல்லியல் துறையின்கீழ் உள்ள பாரம்பரிய சிற்பமான அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு முன், கோவில் வளாக பகுதி உள்ளது. பாரம்பரிய சிற்ப பகுதிக்குரிய தொல்லியல் கட்டுப்பாடுகள் காரணமாக, கோவில் நிர்வாகம் அப்பகுதியில் கட்டமைப்புகள் ஏதுமின்றி திறந்தவெளியாக பராமரித்து வருகின்றன.
அதனாலேயே, கோவில் வளாக சுற்றுச்சுவரும், சிற்பத்தை மறைக்காதவாறு குறைவான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
இதற்கிடையே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு, 3டி லேசர் ஒளி - ஒலி காட்சி திட்டத்தை, 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, கடந்த ஆண்டு முடிவெடுத்தது.
அதற்காக, சிற்பத்தை ஒட்டியுள்ள கோவிலுக்கு சொந்தமான 7,736 ச.அடி., இடத்தை, 25,000 ரூபாய் மாத வாடகை அடிப்படையில், கோவில் நிர்வாகத்திடமிருந்து ஒப்பந்தம் வாயிலாக பெற்றது.
சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம், சிற்பத்தின் முன்புறம் உள்ள கோவில் இடத்தில், பார்வையாளர் அரங்கம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பாரம்பரிய தன்மையுடன் புனரமைக்கப்பட்டுள்ள கோவிலுக்கும், பாரம்பரிய சிற்ப பகுதி சூழலுக்கும், புதிதாக உருவாக்கப்படும் கட்டமைப்புகள் இடையூறாக அமைவதாக, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியரிடையே அதிருப்தி எழுந்தது.
சுற்றுலா, ஹிந்து சமய அறநிலைய ஆகிய துறைகளுக்கு, ஒரே ஆணையர் என்பதால், கோவில் இடத்தை கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, கடந்த ஆண்டு நவம்பரில், நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
சிற்ப பகுதிகளுக்கு அருகில் ஏற்படுத்தும் கட்டமைப்புகள், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்றுடன், முறையாக அனுமதி பெற்று, விதிகளுக்கு உட்பட்டே அமைக்க வேண்டும்.
அத்தகைய அனுமதியுடனேயே திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம், முறையான அனுமதி பெறாமலேயே, திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கான அனுமதிக்காக, தொல்லியல் மண்டல இயக்குனர், கடந்த மார்ச் மாதம், சுற்றுலா பொறியாளருடன் இங்கு ஆய்வு செய்தார்.
இரும்பு தகடு
அப்போது, இத்திட்டம் சிற்ப பகுதிக்கு இடையூறாக உள்ளதாக அறிவுறுத்தினார்.
அப்போது, எத்தகைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்பதை உறுதியாக, மாதிரியுடன் தெரிவித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும் என, சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் கூறினார்.
ஆனால், அனுமதி அளிக்கப்படாது என கருதிய சுற்றுலா நிர்வாகம், பணிகளை அனுமதியின்றி துவங்க திட்டமிட்டு, ஏற்கனவே அமைத்திருந்த கம்பிகள் இணைப்புகள் மீது, நேற்று முன்தினம், 7 அடி உயர இரும்பு தகடுகளை பொருத்தியது.
இத்தகடுகள் கோவிலையும், சிற்பத்தையும் மறைப்பதாக, பக்தர்கள் கோபமடைந்து, கோவில் இடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினர்.
சிற்ப பகுதியில், தொல்லியல் துறை அனுமதி பெறாமல், கட்டுப்பாட்டை மீறி கோவில் நிர்வாகம் செயல்படுவதாக, தொல்லியல் துறையினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பணிகளை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்த, நேற்று காலை பக்தர்கள் திரள உள்ளதாக, கோவில் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, பொருத்தப்பட்ட தகடுகளை, ஒப்பந்ததாரர் ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
அறநிலைய, சுற்றுலா துறைகளின் உயரதிகாரிகள் முடிவெடுத்து தான், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே, கட்டமைப்புகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். தற்போது, கோவிலை மறைக்கும் வகையில், தகடுகள் அமைக்கப்பட்டதை கண்டு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை அகற்றப்பட்டன.
- கோவில் நிர்வாகத்தினர்
மாமல்லபுரம்.
ஹிந்து சமய அறநிலையத்துறை இடத்தில் தான், சுற்றுலாத்துறை திட்டத்தை செயல்படுத்துகிறது. இதனால், அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு இடையூறு தான் ஏற்படும். அனுமதியும் பெறவில்லை. பணிகளை நிறுத்துமாறு, கோவில் நிர்வாகத்திடம் ஏற்கனவே அறிவிப்பாணை அளித்துள்ளோம். இப்போது, தடுப்புகள் அமைத்ததால், கோவில் நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்.
- தொல்லியல் துறையினர்
மாமல்லபுரம்.