/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை நாட்டிய விழா டிச., இறுதியில் துவக்கம்
/
மாமல்லை நாட்டிய விழா டிச., இறுதியில் துவக்கம்
ADDED : டிச 07, 2024 08:21 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பக்கலைச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன.
இந்திய, சர்வதேச பயணியர் கண்டு மகிழ்கின்றனர். இந்திய பயணியர் ஆண்டு முழுதும் வருகின்றனர். சர்வதேச பயணியரை பொறுத்தவரை, அக்., மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை, அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாவிற்கு திரளும் சர்வதேச பயணியர், நம் நாட்டு கலை, கலாசாரம், பாரம்பரிய விழாக்கள் உள்ளிட்டவை குறித்து அறிய ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பயணியருக்காக, தமிழக சுற்றுலாத்துறை, டிச., - ஜன.,யில், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது. ஒரு மாதத்திற்கு நடத்தப்படும் விழாவில், தினசரி மாலை பரதம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நடக்கின்றன.
தற்போது டிச., 22ம் அல்லது 23ம் தேதி, நாட்டிய விழாவை துவக்க முடிவெடுத்து, பாரம்பரிய நாட்டிய, நாட்டுப்புற கலைக் குழுக்கள் நியமன ஏற்பாடு செய்யப்படுவதாக, சுற்றுலாத் துறையினர் தெரிவித்தனர்.