/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் புதிய கட்டடம் கட்டாமல் இழுபறி
/
மாமல்லை வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் புதிய கட்டடம் கட்டாமல் இழுபறி
மாமல்லை வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் புதிய கட்டடம் கட்டாமல் இழுபறி
மாமல்லை வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் புதிய கட்டடம் கட்டாமல் இழுபறி
ADDED : பிப் 14, 2025 01:33 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியும், தொல்லியல் பகுதி தடை காரணமாக கட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மாமல்லபுரம் குறுவட்டம் அமைந்துள்ளது. தலைமையிடம் மாமல்லபுரத்தில், கிழக்கு ராஜ வீதி பகுதியில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் பலமிழந்து, சுவர் விரிசலடைந்து, கூரை பெயர்ந்து சீரழிந்தது.
வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர், இடிந்துவிழும் அபாய கட்டடத்தில் அச்சத்துடன் பணிபுரிந்தனர்.
மழையின் போது, அலுவலக பதிவேடுகள், கணினி உள்ளிட்டவற்றை பாதுகாக்க சிரமப்பட்டனர்.
அத்துறை சேவைகளுக்காக வருபவர்கள், குறுகிய இட நெருக்கடியில் அவதிப்பட்டனர்.
அதை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழைய கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டு, சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.
வருவாய்த் துறை, புதிய கட்டடம் கட்ட, கடந்த 2023ல், 21 லட்சம் ரூபாய் அளித்தும், தற்போது வரை கட்டடம் கட்டப்படாமல் இழுபறியாக உள்ளது.
அலுவலகம் அமைந்துள்ள இடம், தொல்லியல் துறையின் சப்த கன்னியர் வளாகத்தை ஒட்டி உள்ளது.
எனவே, புதிய கட்டுமானங்களுக்கு தொல்லியல் துறை உள்ளிட்ட துறைகள் இடம்பெற்ற அனுமதி அங்கீகார குழுவிடம், முறையான அனுமதி பெற வேண்டும்.
ஆனால், தொல்லியல் சின்னம் வளாகத்திலிருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்குள், புதிய கட்டு மானங்களுக்கு தடை உள்ளதால், வருவாய் ஆய்வாளர் கட்டடம் கட்டப்படாமல் இழுபறியாக உள்ளது.
அதேவேளை, அதே இடத்தில் பேரூராட்சி நிர்வாகம், அத்தியாவசிய தேவை கருதி, 60,000 கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
சப்த கன்னியர் வளாகம், முக்கிய தொல்லியல் சின்னமாக இல்லாததால், வருவாய்த் துறை, அலுவலக கட்டட அவசியம் குறித்து விளக்கி, கட்டடம் கட்ட வேண்டும் அல்லது வேறிடம் ஒதுக்கி, அங்கு கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.