/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது
ADDED : ஆக 27, 2025 02:41 AM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 42. இவர், ரேடியோ சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
நேற்று, செல்வம் மற்றும் அவரது மகன் தனுஷ், 16, ஆகியோர், பள்ளிப்பேட்டை பகுதியிலுள்ள சந்தி கோவில் தெருவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, சவுண்டு சர்வீஸ் அமைக்க சென்றுள்ளனர்.
பின், சவுண்டு சர்வீஸ் வேலைக்குத் தேவையான சில பொருட்களை எடுத்து வர, தனுஷ் மீண்டும், காலை 9:00 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. வீட்டிற்குள் யாரோ இருப்பதை உணர்ந்த தனுஷ், அருகிலுள்ள நண்பர்களுக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.
பின், இவர்களுடன் பொதுமக்களும் வீட்டை சுற்றி வளைத்து கதவை திறந்தனர்.
அப்போது, உள்ளே இருந்த நபர், வீட்டின் பின் பக்க கதவை திறந்து கொண்டு, அருகிலுள்ள முட்புதரில் ஓடி ஒளிந்துள்ளார்.
உடனே, பொதுமக்கள் அவரை மடக்கி, அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த நபர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ், 24, என்பதும், அவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
பின், சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.