/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள்
/
சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள்
சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள்
சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 19, 2025 08:26 PM
செங்கல்பட்டு:மனைவியை கொன்ற வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம், நவநீத கண்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, 30.
இவர், தன் கணவரான, செய்யூர் அடுத்த விளம்பூரைச் சேர்ந்த சங்கர், 35, என்பவரை விட்டு பிரிந்து, தன் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2022 அக்., 23ம் தேதி, மனைவி ஈஸ்வரி வீட்டிற்கு சங்கர் சென்றுள்ளார். அங்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஈஸ்வரியை கையால் தாக்கிய சங்கர், தலையை படுக்கை அறை கதவில் இடித்து, சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சங்கருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மூன்று மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
இறந்த ஈஸ்வரிக்கு ஆண் குழந்தை இருப்பதாக, அரசு தரப்பிலும், சாட்சிகளாலும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த குழந்தை யாருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகிறது என, எவ்வித தகவலும் கூறப்படவில்லை.
குழந்தையின் தற்போதைய நிலை, படித்துக் கொண்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து, குழந்தையின் எதிர்காலத்தை நல்வழியில் அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை.
எனவே, செங்கல்பட்டு குழந்தைகள் நல குழுமம் இதுகுறித்து விசாரித்து குழந்தையின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, கவுரவமான வாழ்வியல் சூழல் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தாயின்றி தவிக்கும் மேற்படி குழந்தையின் எதிர்காலம், தரமான கல்வி, தங்கும் இட வசதி ஆகியவற்றை விசாரித்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.
ஆணையம் நிர்ணயம் செய்யும் இழப்பீடை மூன்று மாதத்திற்குள், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.