/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கனரக வாகனங்கள் எளிதாக திரும்ப மண்ணிவாக்கம் சாலை விரிவாக்கம்
/
கனரக வாகனங்கள் எளிதாக திரும்ப மண்ணிவாக்கம் சாலை விரிவாக்கம்
கனரக வாகனங்கள் எளிதாக திரும்ப மண்ணிவாக்கம் சாலை விரிவாக்கம்
கனரக வாகனங்கள் எளிதாக திரும்ப மண்ணிவாக்கம் சாலை விரிவாக்கம்
ADDED : நவ 21, 2025 02:19 AM

மண்ணிவாக்கம்:மண்ணிவாக்கம் சந்திப்பில், கனரக வாகனங்கள் எளிதாக வளைந்து செல்ல, 2 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
வண்டலுார் -- வாலாஜாபாத் இடையிலான, 34 கி.மீ., துார நெடுஞ்சாலையின் சுற்று பகுதியில் ஒரகடம், வல்லம், வடகால், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம், இருங்காட்டுக்கோட்டை என, ஐந்து சிப்காட் தொழில் துறை பூங்காக்கள் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் மின்னணு பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள், கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் சென்னை துறைமுகத்திற்கு, கனரக வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த கனரக வாகனங்கள், வாலாஜாபாத் சாலையில் பயணித்து, மண்ணிவாக்கம் சந்திப்பில் இடது பக்கமாக திரும்பி, மீஞ்சூர் வெளிவட்ட சாலையை சென்றடைவதில் பெரும் சிக்கல் நிலவியது. இதனால், விபத்துகளும் அரங்கேறின.
இதையடுத்து, கனரக வாகனங்கள் எளிதாக வளைந்து திரும்பும்படி, தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், 2 கோடி ரூபாய் செலவில், மண்ணிவாக்கம் சந்திப்பில் சாலை விரிவாக்க பணிகள், தற்போது துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, மண்ணிவாக்கம் சந்திப்பில், சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
இதற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 157 அடி நீளம், 10 அடி ஆழம், 13 அடி உயரத்தில் 'கான்கிரீட்' மூடு கால்வாய் அமைத்து, சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின், மண்ணிவாக்கம் சந்திப்பில், மிக நீளமான கனரக வாகனங்களும் எளிதாக திரும்பிச் செல்ல முடியும்.
இதுபோல், ஒரகடம் சந்திப்பிலும் சாலை விரிவாக்க பணிகளை விரைவில் துவக்க உள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

