/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பீஹார் நபர்
/
கார் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பீஹார் நபர்
ADDED : ஆக 12, 2025 11:00 PM

சென்னை: கிண்டியில், பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட பீஹார் நபரால், சலசலப்பு ஏற்பட்டது.
குன்றத்துாரைச் சேர்ந்தவர் வீரசேகர், 48. இவர், கிண்டி, மடுவங்கரையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறார். நேற்று காலை பணிக்கு வந்த இவர், காரை அலுவலகம் முன் நிறுத்தினார்.
முற்பகல் 11:30 மணிக்கு, கார் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் உடைத்து, உள்ளே கைவிட்டு துலாவி கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு வந்த வீரசேகர், காரில் இருந்த லேப்டாப்பை திருடாமல் பார்த்து கொண்டார். பின், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, கிண்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கார் கண்ணாடியை உடைத்த நபரின் அடையாள அட்டையை வைத்து, பீஹாரைச் சேர்ந்த ராஜேஷ், 56, என்பது தெரிய வந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கார் கண்ணாடியில் முகம் பார்த்துள்ளார். அதில் மங்கலாக தெரிந்ததால் கண்ணாடியை உடைத்துள்ளார். திருடும் நோக்கத்தில் கண்ணாடியை உடைக்கவில்லை. அவரை எச்சரித்து அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

