/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாலோசனை
/
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாலோசனை
ADDED : அக் 09, 2024 12:41 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், நேற்று மாலை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மற்றும் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த 60 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
வண்டலூர் வட்டம் முருகமங்கலம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்ட குடியிருப்பில், 20 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் குறைந்த மின்னழுத்தம், மீட்டர் மாற்றம், பட்டா வழங்குதல், சாலை அமைத்தல் போன்றவை குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ராஜகுளிப்பேட்டை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 'எம். 500' மாநகர பேருந்துகள் நிறுத்த வேண்டும் என, ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி மனு அளித்தார்.
சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு அபராதம் விதிக்க மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.
இதில், மொத்தம் 235 மனுக்கள் பெறப்பட்டது. பின், அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருண் ராஜ், சார் - ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.