/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளைஞர் பலி பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்
/
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளைஞர் பலி பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளைஞர் பலி பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளைஞர் பலி பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்
ADDED : ஜன 24, 2025 01:00 AM
நெமிலி, திருமால்பூரில் இரண்டு வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சிகிச்சையில் இருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்ற தமிழரசன், 24, விஜயகணபதி, 22. இவர்கள், கடந்த 16ம் தேதி திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருமால்பூர் காலனியைச் சேர்ந்த பிரேம்குமார், 22, உள்ளிட்ட சிலர், தமிழரசன், விஜயகணபதி ஆகியோரை தாக்கி, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பித்து சென்றனர்.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பிரேம்குமார் உள்ளிட்ட சிலர் பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக, மறுநாள் பிரேம் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் தரப்பில், திருமால்பூர், நெமிலி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருமால்பூர் காலனியைச் சேர்ந்த பிரேம்குமார், 22, வெங்கடேசன், 24, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், இன்னொரு முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசன், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, திருமால்பூர் காலனி மற்றும் நெல்வாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தப்பிய நபரை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற நெல்வாய் கிராமத்தினரை, போலீசார் சமாதானம் பேசி அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே அமர வைத்தனர். தொடர்ந்து போலீசார், 'அந்த நபரை உடனே கைது செய்வோம்' என, உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.

