ADDED : ஜன 22, 2025 12:13 AM

சித்தாமூர், சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கூட்ரோடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
நல்லாமூர், பொலம்பாக்கம், கொளத்துார், தொன்னாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சரவம்பாக்கம் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கப் பணியின் போது, இச்சாலையில் இரண்டு பக்கத்திலும் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதால், மாலை மற்றும் இரவு நேரத்தில் கொசுக்கடியால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கொசு உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் சரவம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு உற்பத்தியை தடுக்க, வடிகால்வாயில் எண்ணெய் பந்துகள் வீச நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.