UPDATED : ஜூலை 21, 2026 03:44 PM
ADDED : ஜூலை 21, 2026 03:20 PM
சிங்கபெருமாள் கோவில்:கொண்டமங்கலத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கொண்டமங்கலம் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியை ஒட்டியுள்ள கோவிந்தாபுரம் -- கொண்டமங்கலம் சாலை திருப்போரூர் - சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. கொண்டமங்கலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த சாலை வழியாக நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலை யில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சீரழிந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கொண்டமங்கலம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், கிராம மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பிக்கின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
