/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2025 01:58 AM

சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது.
இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
மேலும் ஆப்பூர் திருக்கச்சூர், கொளத்தூர், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்க பெருமாள் கோவில்,தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 2008ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தால் ரவுண்டானா அமைக்கும் திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மேம்பாலம் அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு நவ.,மாதம் மீண்டும் பூமி பூஜை போடப்பட்டு 138.27 கோடி மதிப்பில் மேம்பால பணி துவங்கப்பட்டது. வேகமாக பணிகள் நடைபெற்று ஒரகடம் பகுதியில் தாம்பரம் மார்க்கமாக செல்லும் வகையில் ஒரு பக்கம் மட்டும் மேம்பாலம் கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கத்தில் இருந்து ஒரகடம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல ரவுண்டானாவும், செங்கல்பட்டு மார்க்கத்தில் வாகனங்கள் இறங்கி செல்லும் வகையில் மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவடைந்து உள்ளன.
அனைத்து பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலத்தின் முகப்பு பகுதி சிமெண்ட் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு உள்ளது. இதனால் சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே மேம்பாலத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.