/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆண்டுதோறும் மூழ்கும் நீலமங்கலம் தரைப்பாலம்
/
ஆண்டுதோறும் மூழ்கும் நீலமங்கலம் தரைப்பாலம்
ADDED : அக் 25, 2025 02:37 AM

செய்யூர்: கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீலமங்கலம் கிராமத்திலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
பவுஞ்சூர் அருகே, நீலமங்கலம் கிராமத்தில் இருந்து ஈசூர் வழியாக, திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் சாலை உள்ளது.
பாதிப்பு கீழ்ப்பட்டு, கல்குளம், குன்னத்துார், தச்சூர், நெல்வாய், சீவடி, நீலமங்கலம் ஆகிய கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இதில் நீலமங்கலத்தில், கிளியாற்றை கடக்கும் 100 மீட்டர் நீளமுடைய தரைப் பாலம் உள்ளது.
மதுராந்தகம் ஏரியில் துார்வாரும் பணிகள் நடந்து வருவதால், ஏரியில் இருந்து 300 கன அடி தண்ணீரை கிளியாற்றின் வழியாக, பொதுப்பணித் துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீலமங்கலம் தரைப்பாலத்தில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
இதன் காரணமாக, சாலை தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலை தண்ணீரில் மூழ்கியதால், ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், 15 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் பருவமழையின் போது கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாதக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், இப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
குற்றச்சாட்டு இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை நடவடிக்கை இல்லை என, இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அடுத்த பருவமழைக்கு முன் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

