/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் புது காவல் நிலைய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
/
கிளாம்பாக்கம் புது காவல் நிலைய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் புது காவல் நிலைய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் புது காவல் நிலைய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 09, 2025 02:10 AM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் காவல் நிலைய பணிகளை முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம்செயல்பாட்டுக்கு வந்த பின், பேருந்து முனையத்தின் உள்பகுதியில், 2024 ஜனவரியில் புதியகாவல் நிலையம் துவக்கப்பட்டது.
இந்த காவல் நிலையத்தின் கீழ் கிளாம்பாக்கம், காரணை- புதுச்சேரி, அய்யஞ்சேரி, ஊனமாஞ்சேரி, வண்டலுார் பூங்கா ஆகிய பகுதிகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் உள்ளே காவல் நிலையம் அவசியம் எனக் கருதி, துரித கதியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம் துவக்கப்பட்டதால், அதற்கான அலுவலகம் உரிய இட வசதியுடன் அமைக்கப்படவில்லை.
இது குறித்து, காவல் துறை உயரதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன. எனவே, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய அலுவலகம் கட்ட, துறை உயரதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அதன்படி, 11.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 33,045 சதுர அடி பரப்பு கட்டுமானத்தில், மூன்று தளங்கள் உள்ள அதிநவீன காவல் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ., வாயிலாக, 2024 செப்., மாதம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதத்தில் கட்டுமான பணிகள் முடிந்து, புதிய காவல் நிலைய அலுவலகம் மே மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது தான், 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு ஆகிய இரு காவல் நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் வெவ்வேறு பகுதிகளில் செயல்படுகின்றன.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு, மகளிர் காவல் நிலையம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தவிர, துறை சார்ந்த உயரதிகாரிகள் இப்பகுதிக்கு ஆய்வுப்பணிக்காக வரும் போது, அவர்களுக்கான அலுவல் பணிகளை தடையின்றி மேற்கொள்ளவும், தனித்தனி அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாலமான வாகன 'பார்க்கிங்' வசதியுடன், ஒரே கட்டடத்தில் அனைத்து பிரிவு காவல் நிலையங்களும் அமைய உள்ளதால், புகார்தாரர்களுக்கு அலைச்சலும், நேர விரயமும் மிச்சமாகும்.
இதனால், நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய காவல் நிலைய அலுவலகத்தை, விரைவில் திறக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.