/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண... புது ரூட்! மதுராந்தகம் - மாமல்லை இடையே இணைப்பு தடம்
/
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண... புது ரூட்! மதுராந்தகம் - மாமல்லை இடையே இணைப்பு தடம்
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண... புது ரூட்! மதுராந்தகம் - மாமல்லை இடையே இணைப்பு தடம்
தாம்பரம் - செங்கல்பட்டு நெரிசலுக்கு தீர்வு காண... புது ரூட்! மதுராந்தகம் - மாமல்லை இடையே இணைப்பு தடம்
ADDED : ஜன 30, 2025 02:07 AM

மாமல்லபுரம்:தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மதுராந்தகம் - மாமல்லபுரம் இடையே, புதிதாக இணைப்பு தடம் ஏற்படுத்த, சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க, தற்போது ஒப்பந்தம் அறிவித்துள்ளது.
சென்னையை மத்திய, தெற்கு உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுடன் சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இணைக்கிறது. இலகு ரக, கனரக, சரக்கு வாகனங்கள் என, தினசரி பல்லாயிரம் வாகனங்கள், இதன் வழியாக கடந்து செல்கின்றன.
இத்தடத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பகுதி, சென்னை நுழைவாயிலாக உள்ளது.
பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வரும் வாகனங்கள், சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு வெளியேறும் வாகனங்கள், நுழைவாயில் பகுதியில் அணிவகுக்கின்றன.
வாகனங்கள் பெருகி வரும் தற்போதைய சூழலில், இத்தடத்தில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறுகிய தொலைவை சில மணி நேரம் வரை, வாகனங்கள் ஊர்ந்து கடக்கின்றன.
பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில், வாகனங்கள் அணிவகுப்பால் போக்குவரத்து முடங்குகிறது.
இத்தகைய சிக்கலுக்கு தீர்வு காண, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தற்போது முயற்சிக்கிறது.
அதாவது, சென்னையை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளுக்கு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கடக்கும் வாகனங்களை, மதுராந்தகத்திலிருந்து திருப்பி, மாமல்லபுரம் வழியாக கடக்கும் வகையில் திட்டமிடுகிறது.
இதற்காக, மதுராந்தகம் - மாமல்லபுரம் இடையே, புதிதாக இணைப்புத் தடம் ஏற்படுத்த, சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்த முடிவெடுத்து உள்ளது.
இதற்காக, 80 லட்சம் ரூபாய் மதிப்பில், தனியார் ஆலோசனை நிறுவனம் வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்தம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடம், மதுராந்தகத்திலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள கருங்குழி, கக்கிலப்பேட்டையில் துவங்கி, திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் முடியும்.
இதன் மொத்த துாரமான 32 கி.மீ.,யில், திருக்கழுக்குன்றத்திற்கு சற்று வெளிப்பகுதியில் இப்பாதை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
கக்கிலப்பேட்டை - திருக்கழுக்குன்றம் இடையே, 21 கி.மீ., தொலைவிற்கு, குறுகிய ஒருவழிப் பாதையே, முன்பு இருந்தது. மாமல்லபுரம் - மதுராந்தகம் நேரடி போக்குவரத்து கருதி, இரண்டு வழிப்பாதையாக மேம்படுத்தும் அவசியம் குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இதை பரிசீலித்த நெடுஞ்சாலைத்துறை, மதுராந்தகம் பகுதியுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூரை, திருக்கழுக்குன்றம் வழியாக இணைக்கும் வகையில், 42 கி.மீ., ஆறுவழிப் பாதையாக மேம்படுத்த, கடந்த 2016ல் அனுமதி அளித்தது.
முதல்கட்டமாக, 62 கோடி ரூபாய் மதிப்பில், 33 அடி அகல சாலையாக, கடந்த 2019ல் விரிவுபடுத்தப்பட்டது.
போக்குவரத்து பெருக்கத்திற்கேற்ப, பின்னர் ஆறு வழியாக விரிவுபடுத்த முடிவெடுத்தது.
இத்தடத்தில், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று தரைப்பாலம், முக்கியமானது. சாலையை விரிவுபடுத்திய நெடுஞ்சாலைத்துறை, இப்பாலத்தை மட்டும் புதிதாக அமைக்கவில்லை.
இதனால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய குறுகிய பாலமே, தற்போதும் நீடிக்கிறது. இந்த பாலத்தை 150 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்ட முடிவெடுத்தும், அரசு நிர்வாக உத்தரவின்றி கிடப்பில் உள்ளது.
இதன் காரணமாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தை மூழ்கடித்து, இரண்டு வாரங்களுக்கும் மேல், போக்குவரத்து முடங்குவதும் தொடர்கிறது.
இச்சூழலில், மதுராந்தகம் - மாமல்லபுரம் இடையே, புதிதாக இணைப்பு தடம் ஏற்படுத்த முடிவெடுத்து, ஆய்விற்கு அறிவித்துள்ளது, வரவேற்பை பெற்றுள்ளது.
மாமல்லபுரத்தில் இத்தடம் இணையும் பூஞ்சேரி பகுதியில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை இணைகின்றன.
மேலும், எண்ணுார் - மாமல்லபுரம் இடையே அமையும் புதிய சாலையும், இங்கு இணைகிறது. இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில், சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையும் அமைந்துள்ளது.
மதுராந்தகம் - மாமல்லபுரம் புதிய சாலையால் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு, நேரடி இணைப்பு ஏற்படும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதிக்கும் இணைப்பு ஏற்படும். எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வல்லிபுரம் பாலத்திற்கு தீர்வு வரும்
மதுராந்தகம் அடுத்த கருங்குழி - பூஞ்சேரி இடையே, புதிதாக இணைப்புச் சாலை ஏற்படுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்து உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் அறிவித்து உள்ளது. சாத்தியக்கூறு இருந்தால், இதை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும். வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று உயர்மட்ட பாலத்திற்கும், இதனால் தீர்வு கிடைக்கும்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரி.

