தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புக்கு இந்தாண்டும் தீர்வு இல்லை! தற்காலிகமாக மண் கரையை பலப்படுத்த ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புக்கு இந்தாண்டும் தீர்வு இல்லை! தற்காலிகமாக மண் கரையை பலப்படுத்த ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புக்கு இந்தாண்டும் தீர்வு இல்லை! தற்காலிகமாக மண் கரையை பலப்படுத்த ரூ.42 லட்சம் ஒதுக்கீடு


UPDATED : ஆக 18, 2026 06:31 AM

ADDED : ஆக 17, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 06:31 AM ADDED : ஆக 17, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: வெள்ளகொண்டகரம் - புதுப்பட்டு இடையே ஓங்கூர் ஆற்றில் நிரந்தர தடுப்பு சுவர் அமைக்காமல் இருப்பதால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து, பாதிப்பு ஏற்படும் என, மக்கள் புலம்புகின்றனர். நிரந்தர சுவர் கேட்டு 20 ஆண்டுகளாக போராடிவரும் நிலையில், தற்காலிக தீர்வாக 42 லட்சம் ரூபாய்க்கு மண் கரை அமைக்கப்படுவதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு, விழுப்பரம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கும் பிரதான எல்லை பகுதியாக, ஓங்கூர் ஆறு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள, சாராம் ஏரியின் உபரி நீரோடையில் உற்பத்தியாகி, 42 கி.மீ., பயணம் செய்து மரக்காணம் அருகே, வங்க கடலில் கலக்கிறது.

இந்த ஓங்கூர் ஆறு 1,480 சதுர கி.மீ., பரப்பளவில், இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 கிராமங்களில், விவாசயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. 2,000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 1,500 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலம் உள்ளது.

இரு மாவட்ட எல்லையான ஓங்கூர் ஆற்று பகுதியில், மண் கரை மட்டுமே இருப்பதால், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் உடைப்பு ஏற்படும்.

அதுபோல் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வன்னியநல்லுார், விளாம்பட்டு பகுதிகளில் கரைகள் உடைந்து, வெள்ளகொண்டகரம், புதுப்பட்டு, விளாம்பட்டு, புதுக்குடி, புதுப்பேட்டை, மண்டகப்பட்டு ஆகிய கிராமங்கள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது; மக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்தனர்.

இதுபோல், கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2018ல் வெள்ளப்பெருக்கின் போது விவசாய நிலங்கள் மணல் மேடுகளாக மாறி, விவசாய பணியும் பாதிக்கப்பட்டது.

வீடு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு, அரசு சார்பில் 2,000 ரூபாய் முதல் 5,000 வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலர் அரசு ஆவணங்களை இழந்து தவிப்பதால், நிவாரணம் பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

ஆண்டுதோறும் பருவமழையின் போது, ஓங்கூர் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதாகிறது.

அதனால், நிரந்தர தடுப்பு அமைத்து தரும்படி, கிராமத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், ஓங்கூர் ஆற்றை ஒட்டியுள்ள நான்கு கிராமங்களில் தற்காலிகமாக மண் கரை அமைக்க, 42 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

தனியார் ஒப்பந்ததாரர் மூலம், ஆற்றின் கரையில் உடைந்த பகுதிகளில், தற்காலிகமாக மண் கரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் வெள்ளம் வரும்போதெல்லாம் ஆற்றை ஒட்டியுள்ள கிராமத்தினர் பீதியடையும் நிலையே உள்ளது.

இதற்கு தீர்வாக, நிரந்தர தடுப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். ஆனால் தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது.

எவ்வளவு பெரிய கரை அமைத்தாலும், வேகமாக பாயும் ஆற்று வெள்ளப்பெருக்கில் கரை அடித்துச் செல்லப்படுகிறது. மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது.

பருவமழை காலத்தில் கிராமங்களில் தண்ணீர் சூழாமல் இருக்க, வெள்ளகொண்டகரம் - புதுப்பட்டு இடையே 3.2 கி.மீ., நீளத்திற்கு ஆற்றில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இதற்கு, தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பருவமழை அதிகமாக பெய்தால், வெள்ளகொண்டகரத்தில் தண்ணீர் சூழந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்படும்.

இதற்கு தீர்வாக வெள்ளகொண்டகரம் - புதுப்பட்டு இடையே ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க, 20 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு நிர்வாக அறிக்கை அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us